தமிழ்நாடு

5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் அதிகரித்த வெறிநாய்க்கடி மரணங்கள்

ராம் அப்பண்ணசாமி

கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நடப்பாண்டில் தற்போது வரை 6.42 லட்சம் வெறி நாய்க்கடிகளும், அதனால் ஏற்பட்ட ரேபிஸ் தொற்றால் 34 மனித உயிரிழப்புகளும் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ளன.

கடந்த ஆண்டில் 4.40 லட்சமாக இருந்த வெறி நாய்க்கடி சம்பவங்கள், நடப்பாண்டில் 6.41 லட்சமாக உயர்ந்துள்ளன. மேலும் வெறி நாய்க்கடியால் ஏற்பட்ட ரேபிஸ் தொற்றால் 2020-ல் 20 உயிரிழப்புகளும், 2021-ல் 19 உயிரிழப்புகளும், 2022-ல் 28 உயிரிழப்புகளும், 2023-ல் 22 உயிரிழப்புகளும், நடப்பாண்டில் அக்.1 வரை 34 உயிரிழப்புகளும் தமிழகத்தில் நிகழ்ந்துள்ளன.

டெங்குவால் தமிழகத்தில் தற்போது வரை 7 உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. ஆனால் வெறி நாய்க்கடியால் டெங்குவைவிட 5 மடங்கு அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. ரேபிஸ் தடுப்பூசிப் பற்றாக்குறையும், தகுந்த விலங்கு பிறப்பு கட்டுப்பாடு திட்டம் இல்லாததும் ரேபிஸ் தொற்றால் ஏற்படும் உயிரிழப்புகளை தமிழகத்தில் அதிகரித்துள்ளன.

சென்னை, கோவை போன்ற மாவட்டங்களில் நாய்க் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் நாய்களின் எண்ணிக்கை குறித்த நம்பகமான தரவுகள் இல்லை, இதனால் தகுந்த அளவிலான ரேபிஸ் தடுப்பூசிகள் கொள்முதல் செய்வதற்குத் திட்டமிடுவதில் பிரச்னை ஏற்படுகிறது. இத்துடன் நிதிப்பற்றாக்குறையும் தடுப்பூசிகள் கொள்முதலில் சுணக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதே நேரம் தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் மட்டும் பிற மாவட்டங்களில் இல்லாத அளவுக்கு, கடந்த 15 ஆண்டுகளில் ஒரு வெறி நாய்க்கடி உயிரிழப்பு கூட ஏற்படவில்லை.