https://x.com/arivalayam
தமிழ்நாடு

மக்களுக்கு இடையூறு செய்யும் இயக்கம் அல்ல திமுக: தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் | DMK | Stalin |

பழைய, புதிய எதிரிகளால் தொட்டுக் கூடப் பார்க்க முடியாத இயக்கம் திமுக என சூளுரை...

கிழக்கு நியூஸ்

பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் இயக்கம் திமுக அல்ல என தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

திமுகவின் முப்பெரும் விழாவான பெரியார் பிறந்தநாள், அண்ணா பிறந்தநாள் மற்றும் திமுக தொடக்க நாள் ஆகியவை வரும் செப்டம்பர் 15-ல் கரூரில் கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடு நடவடிக்கைகளை திமுகவினர் மும்முரமாகச் செய்து வருகின்றனர். இந்நிலையில், முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், ”கலைஞர் முப்பெரும் விழாக்களைத் தொடங்கியபோது இளைஞரணிச் செயலாளராக வெண்சீருடை அணிந்த பட்டாளத்துடன் பேரணியை வழிநடத்தியவன் நான். முப்பெரும் விழா என்பது நம்மை நாமே ஊக்கப்படுத்திக் கொள்ளும் திருவிழா. பழைய எதிரிகள் - புதிய எதிரிகள் என எந்தக் கொம்பனாலும் திராவிட முன்னேற்றக் கழகம் எனும் கொள்கை உறுதிமிக்க எஃகுக் கோட்டையைத் தொட்டுக் கூட பார்க்க முடியாது என்று உங்களில் ஒருவனான நானும், என்னுள் கலந்திருக்கும் உடன்பிறப்புகளான நீங்களும் சூளுரைக்கும் திருநாள்.

கரூரின் புறவழிச்சாலையில் முப்பெரும் விழா நடைபெற இருக்கிறது. கரூர் மாவட்டக் கழகச் செயலாளர் செந்தில்பாலாஜி ஓய்வின்றி விழா ஏற்பாடுகளைச் செய்து வருகிறார். கொள்கையில்லாக் கூட்டத்தைச் சேர்த்து, கூக்குரலிட்டு, கும்மாளம் போட்டு, பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் இயக்கமல்ல தி.மு.கழகம். நாம் கூடும்போது கொள்கைப் பட்டாளமாகக் கூடுவோம். கூட்டம் முடிந்து இலட்சிய வீரர்களாகப் புறப்படுவோம். இருவண்ணக் கொடியேந்தி கொள்கைக் குடும்பமாக அணிதிரள்வீர்! இலட்சியத்தை நெஞ்சில் ஏந்தி, பாதுகாப்பாகத் திரும்பிச் செல்வீர். பெரியார் – அண்ணா - கலைஞர் புகழ் நிலைக்கட்டும்! கழகத்தின் வெற்றிச் சரித்திரம் தொடரட்டும்” என்று கூறியுள்ளார்.

Stalin | DMK | Mupperum Vizha | Letter to DMK Followers | MK Stalin |