தமிழ்நாடு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக வெற்றி!

நாதக வேட்பாளர் சீதாலட்சுமி 23,810 வாக்குகள் பெற்று டெபாசிட்டை இழந்தார்.

ராம் அப்பண்ணசாமி

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் 1,14,439 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றுள்ளார் திமுக வேட்பாளர் வி.சி. சந்திரகுமார்.

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக்குறைவால் கடந்தாண்டு டிசம்பரில் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு, பிப்ரவரி 5-ல் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

திமுக வேட்பாளராக ஈரோடு கிழக்கு தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ.வும், அக்கட்சியின் கொள்கை பரப்பு இணைச் செயலாளருமான வி.சி. சந்திரகுமார் அறிவிக்கப்பட்டார். அதிமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இடைத்தேர்தலை புறக்கணித்த நிலையில், மா.கி. சீதாலட்சுமியை வேட்பாளராக அறிவித்தார் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்.

இறுதி வேட்பாளர் பட்டியலின்படி மொத்தம் 46 வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள். பிப்.5-ல் நடைபெற்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவின்போது 80,376 பெண்கள், 74,260 ஆண்கள் மற்றும் 31 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 1.55 லட்சம் பேர் வாக்களித்தார்கள்.

இடைத்தேர்தலில் பதிவான 67.97 சதவீத வாக்குகளின் எண்ணிக்கை இன்று (பிப்.8) நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையின் ஆரம்பம் முதலே முன்னிலை வகித்து வந்த திமுக வேட்பாளர் சந்திரகுமார் 17 சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் 1,14,439 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.

2-வது இடத்தைப் பிடித்த நாதக வேட்பாளர் சீதாலட்சுமி 23,810 வாக்குகள் பெற்று டெபாசிட்டை இழந்தார். இதன் மூலம் முதல்முறையாக ஈரோடு கிழக்கு தொகுதி திமுக வசமானது.