படம்: https://x.com/arivalayam/status
தமிழ்நாடு

"பட்ஜெட்டில் வஞ்சிக்கப்பட்ட தமிழ்நாடு": ஜூலை 27-ல் திமுக ஆர்ப்பாட்டம்

"மெட்ரோ ரயில் திட்டத்துக்கான நிதி, தமிழ்நாடு சந்தித்த இரண்டு தொடர் பேரிடர் இழப்புகள் ஆகியவற்றுக்கு நிதி வழங்கிட வேண்டுமென்று முதல்வர் முன்வைத்த கோரிக்கைகள் முற்றிலுமாகப் புறக்கணிப்பு."

கிழக்கு நியூஸ்

மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டை வஞ்சித்த பாஜக அரசைக் கண்டித்து ஜூலை 27-ல் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக திமுக அறிவித்துள்ளது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த செவ்வாய்க்கிழமை 2024-25-ம் நிதியாண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த நிதிநிலை அறிக்கையில் பிஹார் மற்றும் ஆந்திரப் பிரதேசத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சனங்கள் வைத்தன. இந்த நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு என்ற பெயர் இடம்பெறாததற்கு, தமிழ்நாட்டிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பின.

இதற்கு விளக்கமளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நிதிநிலை அறிக்கையில் ஒவ்வொரு மாநிலத்தின் பெயரையும் குறிப்பிடுவதற்கு நேரம் இருப்பதில்லை என்றார்.

தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டுள்ளதாக திமுக கடுமையான விமர்சனங்களை எழுப்பின. ஜூலை 27-ல் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிப்பதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

இந்த நிலையில், ஜூலை 27-ல் மாவட்டத் தலைநகரங்களில் பாஜக அரசைக் கண்டித்து காலை 10 மணியளவில் திமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.

"தங்கள் ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக சில மாதங்களுக்கு மட்டும் நிதியைத் தாராளமாக அள்ளிக் கொடுத்தும், நாட்டின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்து வரும் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் மீது வன்மத்தைக் கக்கிடும் வகையில் இந்த ஆண்டின் ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை அமைந்திருக்கிறது.

மெட்ரோ ரயில் திட்டத்துக்கான நிதி, தமிழ்நாடு சந்தித்த இரண்டு தொடர் பேரிடர் இழப்புகள் ஆகியவற்றுக்கு நிதி வழங்கிட வேண்டுமென்று தமிழ்நாடு முதல்வர் முன்வைத்த கோரிக்கைகளை முற்றிலுமாகப் புறக்கணித்து சில மாநிலங்களுக்கு மட்டும் பேரிடர் நிதி அள்ளி வழங்கப்பட்டுள்ளது.

ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் மாற்றாந்தாய் போக்குடன் தமிழ்நாட்டை வஞ்சித்த பாசிச பாஜக ஒன்றிய அரசைக் கண்டித்து ஜூலை 27-ல் காலை 10 மணியளவில் மாவட்டத் தலைநகரங்களில் திமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்" என்று திமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.