கோப்புப்படம் ANI
தமிழ்நாடு

ஈரோடு கிழக்கில் திமுக போட்டி

"ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் போட்டியிடுவார் என்று இன்று உறுதி செய்யப்பட்டது."

கிழக்கு நியூஸ்

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் இண்டியா கூட்டணி சார்பில் திமுக போட்டியிடுவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2021 சட்டப்பேரவைத் தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈவேரா. இவர் மறைவைத் தொடர்ந்து 2023 பிப்ரவரியில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.

இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக திருமகன் ஈவேராவின் தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றார். ஈவிகேஎஸ் இளங்கோவன் டிசம்பர் 14-ல் காலமானார். இதனால், ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, பிப்ரவரி 5 அன்று ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. பிப்ரவரி 8 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று காலை தொடங்கியது. ஜனவரி 17 வரை வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யலாம். ஜனவரி 18 அன்று வேட்புமனு பரிசீலனை செய்யப்படும். வேட்புமனுக்களைத் திரும்பப் பெற ஜனவரி 20 கடைசி நாள்.

2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ளதால், ஈரோடு கிழக்கு தொகுதி மீண்டும் காங்கிரஸுக்கு ஒதுக்கப்படுமா அல்லது திமுக போட்டியிடுமா என்ற கேள்வி இருந்தது. இந்த நிலையில் இண்டியா கூட்டணி சார்பில் திமுக போட்டியிடுவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"2026 சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், முதல்வர் மற்றும் இண்டியா கூட்டணியின் தமிழ்நாட்டின் தலைவராக விளங்கிக் கொண்டிருக்கும் மு.க. ஸ்டாலின், முதல்முறையாக கேட்டுக்கொண்டதற்கு இணங்க அகில இந்திய காங்கிரஸ் தலைமை மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைமையின் தீவிர ஆலோசனைக்குப் பிறகு நாங்கள் அனைவரும் ஒரு மனதாக ஏற்றுக்கொண்டு இண்டியா கூட்டணியின் சார்பாக ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் போட்டியிடுவார் என்று இன்று உறுதி செய்யப்பட்டது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.