கோப்புப்படம் 
தமிழ்நாடு

என் வாக்காளர்களைக் குறிவைத்து திமுக அரசு திட்டத்தை செயல்படுத்துகிறது: சீமான்

300 பெண்கள் படிக்கும் அரசுப் பள்ளிகளில் இரண்டு கழிவறைகள் மட்டுமே உள்ளது. ஆனால் 482 கோடிக்கு சிலை திறக்கிறீர்கள், பல நூறு கோடிக்கு சமாதி கட்டுகிறீர்கள்

ராம் அப்பண்ணசாமி

எனக்கு வாக்களிக்கும் புதிய வாக்காளர்களைக் குறி வைத்து புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் போன்ற திட்டங்களை செயல்படுத்துகிறது திமுக அரசு என்று செய்தியாளர் சந்திப்பில் குற்றம்சாட்டியுள்ளார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்.

இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் சீமான் பேசியவை பின்வருமாறு:

`நான் பெற்ற 36 லட்சம் வாக்குகளில் குறைந்தபட்சம் 25 லட்சம் வாக்குகள் திமுக குடும்பத்திலிருந்து வந்துள்ளன. ஒரு குடும்பத்தில் அப்பா திமுகவில் இருந்தால், பிள்ளைகளும், பேரப் பிள்ளைகளும் என்னுடன் இருக்கின்றனர். எனக்கு இளம் பெண்களும், பிள்ளைகளும், புதிய வாக்காளர்களும் ஓட்டுப் போடுகிறார்கள். அவர்களைக் குறி வைத்து புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டங்களில் ரூ. 1000 தரப்படுகிறது.

மாதம் ரூ. 1000 வீதம், ஒரு ஓட்டுக்கு ரூ. 18,000 தரப்படுகிறது. இதை எல்லாம் ஒரு திட்டம் என்று சொல்ல வெட்கப்பட வேண்டும். படித்து முடித்து வெளியே வரும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பைக் கொடுத்து, அவர்களுக்கு வருவாய் பெருக்கத்தை ஏற்படுத்தி தன் கால்களில் நின்று வாழ்கிற வாழ்வை பெண்களுக்கும், ஆண்களுக்கும் ஏற்படுத்திக் கொடுப்பதற்குப் பெயர்தான் திட்டம். ஆனால் இது அப்படியல்ல.

அரசுப் பள்ளிகள் பள்ளிகளைப் போல இருக்கிறதா? 300 பெண்கள் படிக்கும் அரசுப் பள்ளிகளில் இரண்டு கழிவறைகள் மட்டுமே உள்ளது. ஆனால் நீங்கள் 482 கோடிக்கு சிலை திறக்கிறீர்கள், பல நூறு கோடிக்கு சமாதி கட்டுகிறீர்கள், 50-60 கோடிகளை செலவழித்து கார் பந்தையம் நடத்துகிறீர்கள். உங்களை எல்லாம் நாங்கள் எந்தக் கணக்கில் சேர்ப்பது?

மேற்கூறை இல்லாமல், மர நிழலில் செயல்படுகிறது விழுப்புரத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளி. அது குறித்து சமூக வலைதளங்களில் பார்க்கிறீர்களா இல்லையா? அத்தியாவசியமான விஷயங்கள், அதாவது மக்களின் நலன் சார்ந்து நீங்கள் செயல்படவில்லை. சீமான் பின்னால் கூட்டம் கூடுகிறது என்கிறீர்கள். காசு குடுத்து கூட்டம் கூட்டும் நீங்களே நம்பிக்கையுடன் இருக்கும்போது, எங்களுக்கும் நம்பிக்கை வருவதில் என்ன பிரச்னை?’.