தமிழ்நாடு

நீட் தேர்வுக்கு எதிராக திமுக மாணவரணி ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற பதாதைகளை ஏந்தி திமுக மாணவரணியினர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.

ராம் அப்பண்ணசாமி

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திமுக மாணவரணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சமூக நிதி, மாநில உரிமை, கல்வி உரிமைகளுக்கு எதிரான நீட் தேர்வை நீக்க மறுக்கும் மத்திய அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருப்பதாக தன் எக்ஸ் தளத்தில் நேற்று பதிவிட்டிருந்தார் எழிலரசன்.

இந்நிலையில், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற பதாதைகளை ஏந்தி, மத்திய அரசுக்கு எதிராகக் கோஷமிட்டு திமுக மாணவரணியினர் இன்று ஆர்ப்பாட்டம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எழிலன் எம்.எல்.ஏ ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

நீட் தேர்வு மட்டுமல்லாமல், மத்திய அரசு சார்பில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வுகளாக சியுஇடி, நெட் போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கு எதிராகவும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

கடந்த மே 5-ல் நடத்தப்பட்ட மருத்துவ இளநிலை படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவு ஜூன் 4-ல் வெளியானது. நீட் முடிவுகளை முன்வைத்து நாடு முழுவதும் சர்ச்சை ஆன நிலையில், அது குறித்து வழக்கு தொடரப்பட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.