கோப்புப்படம் 
தமிழ்நாடு

வாக்காளர்களுக்கு ரூ. 10 ஆயிரம் கொடுத்தால்..: விக்கிரவாண்டி தோல்வி குறித்து அன்புமணி

கிழக்கு நியூஸ்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக பணத்தையும், பொருளையும், அதிகாரத்தையும் வைத்து வெற்றி பெற்றுவிட்டதாக பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 1.24 லட்சம் வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். பாமக 56 ஆயிரம் வாக்குகளைப் பெற்றது. நாம் தமிழர் உள்பட மற்ற வேட்பாளர்கள் டெபாசிட்டை இழந்தார்கள்.

தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அன்புமணி கூறியதாவது:

"விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பணத்தையும், பொருளையும் கொடுத்து அதிகாரத்தை வைத்து திமுக வெற்றி பெற்றுள்ளது. இது உண்மையான வெற்றி கிடையாது. நேர்மையான முறையில் ஒரு பைசா செலவில்லாமல் பெற்ற 56,300 வாக்குகளைதான் உண்மையான வெற்றியாக நாங்கள் கருதுகிறோம்.

ஏறத்தாழ ரூ. 250 கோடியை திமுக செலவு செய்துள்ளது. ரூ. 6 ஆயிரத்துக்குப் பணமும், ரூ. 4 ஆயிரத்துக்குப் பொருளும் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் 33 அமைச்சர்கள், 125-க்கும் மேற்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள், 30-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் களத்தில் இருந்தார்கள். இவர்கள் அனைவரும் வாக்குகளைச் சேகரிக்கவில்லை. மாறாக பணத்தைக் கொடுத்து வாக்குகளைப் பெற்றார்கள்.

திமுக மூன்று தவணையாக வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்தது. அரிசி, பருப்பு, எண்ணெய், மூக்குத்தி, புடவை என அனைத்துப் பொருள்களையும் திமுக கொடுத்தது. இது உலகத்துக்குத் தெரிந்தது, ஆனால் தேர்தல் ஆணையத்துக்குத் தெரியவில்லை. இது வெட்கக்கேடு.

நேர்மையான முறையில் தேர்தல் நடைபெற்றிருந்தால், திமுக வேட்பாளரைத் தகுதி நீக்கம் செய்திருக்க வேண்டும். தேர்தல் ஆணையர் இது எதையும் தெரியாது என்று கூறினால், அவர் இந்தப் பணிக்குத் தகுதியானவர் அல்ல. இவருக்கு உடந்தையாக இருக்கும் அனைவருமே தகுதியானவர்கள் அல்ல.

இடைத்தேர்தல் இப்படிதான் நடைபெற வேண்டுமா. இதுவொரு ஜனநாயகக் கேலிக்கூத்து. இதில் முதல்வர் பெருமைபட எதுவும் இல்லை.

இருந்தபோதிலும், இவற்றை மீறி தொகுதி மக்கள் எங்களுக்கு நேர்மையாக வாக்களித்தார்கள். இதற்கு தொகுதி மக்களை நான் குறைகூற மாட்டேன். விக்கிரவாண்டி தொகுதி என்பது தமிழ்நாட்டிலேயே மிகமிக பின்தங்கிய தொகுதி. விழுப்புரம் மாவட்டமும் பின்தங்கிய மாவட்டம். இதில் வாழ்வாதாரம் கிடையாது, வேலைவாய்ப்பு கிடையாது, தொழிற்சாலை கிடையாது. தனிநபர் வருமானத்தில் தமிழ்நாட்டில் கடைசி இடத்தில் இருக்கக்கூடிய மாவட்டம் விழுப்புரம்.

இந்தத் தொகுதி வாக்காளர்களுக்கு ரூ. 500 பெரிய விஷயம். ரூ. 10 ஆயிரம் கொடுத்தால், கொடுத்தவர்களுக்கு வாக்களிக்கதான் செய்வார்கள்.

சுதந்திரமடைந்து 77 ஆண்டுகள் ஆன பிறகும், இந்த மக்களை இப்படிதான் வைத்துள்ளார்கள். இவர்கள் படித்து, வேலைக்குச் சென்று தெளிவடைந்துவிட்டால் வாக்களிக்க மாட்டார்கள். எனவே, மக்களை இப்படியே அடிமையாக வேலையில்லாமல் கூலியாக வைத்திருக்க வேண்டும் என நினைக்கிறார்கள். அப்போதுதான் தேர்தல் நேரத்தில் மக்கள் கையேந்தி காசு வாங்கிக்கொண்டு வாக்களிப்பார்கள். இதுதான் திராவிட மாடல். இதைத்தான் முதல்வர் மு.க. ஸ்டாலின் சொல்கிறார்" என்றார்.