படம்: https://twitter.com/ANI/status
தமிழ்நாடு

பணம் கொடுத்ததாக நிரூபித்தால் அரசியலைவிட்டு விலகுகிறேன்: அண்ணாமலை

கிழக்கு நியூஸ்

கோவை மக்களவைத் தொகுதியில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்ததாக நிரூபித்தால் அரசியலைவிட்டு விலகுகிறேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கியது. அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் ஆர்வமாக வாக்களித்து வருகிறார்கள்.

பாஜக மாநிலத் தலைவரும், கோவை பாஜக வேட்பாளருமான அண்ணாமலை கரூர் மாவட்டம் ஊத்துப்பட்டியில் வாக்களித்தார்.

இதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை கூறியதாவது:

"தேர்தல் திருவிழா நாளில் நாம் அனைவரும் நம் ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும். காரணம், ஜனநாயகத்தின் வலிமை என்பது வாக்காளர்கள் மட்டும்தான். இந்த நாடு எப்படி செல்ல வேண்டும் என்பதை வாக்காளர்கள் முடிவு செய்கிறார்கள்.

நல்லவர்கள் நம்மை ஆள வேண்டும். அதேநேரத்தில் ஆள்பவர்களுக்கும் நமக்கும் எப்போதும் ஒரு தொப்புள்கொடி உறவு இருக்க வேண்டும். எனவே, அனைவரும் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். நான் எனது சொந்த ஊரில் ஜனநாயகக் கடமையை ஆற்றியிருக்கிறேன்.

எங்கு இருந்தாலும், மாலை 7 மணிக்குள் வாக்கைச் செலுத்துங்கள். நல்ல ஒரு ஆட்சியைக் கொண்டுவர உதவுங்கள். நல்லவர்களுக்கு வாக்களியுங்கள். ஒரு பெரிய மாற்றம் வருவதற்குத் துணை நிற்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இந்த முழுத் தேர்தலையும் மிகமிக நேர்மையாக எதிர்கொண்டிருக்கிறேன். திமுகவைப் பொறுத்தவரை கோவையை வென்றுவிடலாம் என்று நினைத்திருக்கிறார்கள். கோவை நாடாளுமன்றத் தொகுதியில் யாரேனும் ஒருவருக்கு பாஜக சார்பில் யாரெனும் பணம் கொடுத்தார்கள் என்று கூறினால், அந்த நிமிடமே அரசியலைவிட்டு விலகுகிறேன். இதுவொரு தர்மத்தின் போராட்டம், நியாயத்தின் போராட்டம். அனைவரையும் எதிர்த்துக் களத்தில் நிற்கிறேன்.

பணத்தைக் கொண்டு கோவை மக்களவை வாங்கிவிடலாம் என்று திமுக மற்றும் வேறுகட்சிகள் நினைக்கிறார்கள். ஆனால், கோவை மக்கள் இதற்குத் தக்க பதிலடியைக் கொடுப்பார்கள். கரூரிலும் பதிலடியைக் கொடுப்பார்கள்.

இந்தத் தேர்தலிலிருந்து பண அரசியல் முடிவுக்கு வருகிறது. அறம் சார்ந்த வேள்வியாக எடுத்து தேர்தலை நடத்தியுள்ளோம். பணநாயகத்துக்கான முடிவு கட்டுவது இன்று கோவையிலிருந்து ஆரம்பிக்கும்" என்றார் அண்ணாமலை.