ஆதவ் அர்ஜுனா வாய்க்கு வந்ததை எல்லாம் பேசுகிறார். அது நீதிமன்ற அவமதிப்பு ஆகும் என்று திமுக எம்.பி.யும் மூத்த வழக்கறிஞருமான வில்சன் தெரிவித்தார்.
கரூர் கூட்ட நெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரிக்கவும், அதைக் கண்காணிக்க ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையிலான சிறப்பு விசாரணைக் குழுவையும் அமைத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதையடுத்து உச்ச நீதிமன்ற வளாகத்தில் திமுக எம்.பி.யும் மூத்த வழக்கறிஞருமான வில்சன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் கூறியதாவது:-
“உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது இடைக்கால தீர்ப்புதான். இந்த தீர்ப்பு இறுதி உத்தரவுக்கு உட்பட்டது. எனவே, இறுதி உத்தரவு என்ன என்பதை நாம் காத்திருந்து பார்க்க வேண்டும். அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் தொடர்ந்து செயல்படும், அது ரத்து செய்யப்படவில்லை. மேலும், சிறப்பு புலனாய்வுக் குழு இதுவரை மேற்கொண்ட விசாரணைகளை சிபிஐயிடம் ஒப்படைக்கச் சொல்லி உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் பொருள், இதுவரை அவர்கள் மேற்கொண்ட விசாரணைகள் செல்லுபடியாகும். சில சமயங்களில், நீதிமன்றம் முதலில் இருந்து விசாரணையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று உத்தரவிடலாம். ஆனால், இந்த வழக்கில், இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை ஒப்படைக்க வேண்டும் என்று மட்டுமே சொல்லியிருக்கிறது.
போலியான பெயரில் வழக்கு தொடரப்பட்டு, நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பிறகு, மோசடியாக தனது பெயரில் தாக்கல் செய்யப்பட்டதாக மனுதாரர் கூறினால், நீதிமன்றம் அந்தத் தீர்ப்பை ரத்து செய்யும். ஆகவே, இன்று சிலர் இந்தத் தீர்ப்பைப் பெரிதாகக் கொண்டாடினாலும், இது மோசடியாக இருப்பது தெரியவந்தால், நீதிமன்றம் தீர்ப்பை திரும்பப் பெற வாய்ப்புள்ளது. வழக்கு விசாரணையின்போது மெய்நிகராக ஆஜரானவர்கள், தீர்ப்பு வழங்கப்பட்ட பிறகு தங்களுக்குத் தெரியாமல் மனுத்தாக்கல் செய்யப்பட்டதாகக் கூறினார்கள். உடனே, அதைத் தனி மனுவாக தாக்கல் செய்யுங்கள். விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கிறோம் என்று நீதிபதிகள் கூறிவிட்டார்கள்.
உச்ச நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பு பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த விதத்திலும் பயன்படாது. தங்கள் மீது தவறு இல்லை என்று காட்டிக் கொள்பவர்களுக்கு மட்டும்தான் இந்தத் தீர்ப்பு பயன்படும்.
ஆதவ் அர்ஜுனா சிபிஐ விசாரணையைக் கேட்கவில்லை என்று முதலில் சொன்னார்கள். தற்போது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டப்பது எங்களுக்கு வெற்றி என்று சொல்கிறார். நீதிமன்றத்தில் அவர்கள் வைத்த வாதம் வேறு. தீர்ப்பு வந்ததும் வெளியில் சொல்வது வேறாக இருக்கிறது. சென்னை உயர் நீதிமன்றத்திற்கு தமிழக அரசு அழுத்தம் கொடுத்தது என்று ஆதவ் அர்ஜுனா கூறியிருந்தால் அது நீதிமன்ற அவமதிப்பாகும். அவர் வாய்க்கு வந்ததையெல்லாம் கூறுகிறார். நீதிமன்றத்தை அவர் இவ்வாறு அவதுறாகப் பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.” என்றார்.