தமிழ்நாட்டில் தொடங்கியுள்ள வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் குளறுபடிகள் இருப்பதால் பல லட்சம் வாக்குகளை இழக்கும் அபாயம் உள்ளது என்று திமுக எம்.பி. என். ஆர். இளங்கோ தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்களில் நேற்று (நவ. 4) முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஒரு மாத காலம் இந்தக் கணக்கெடுப்புப் பணிகள் நடக்கும் நிலையில், சிறப்பு தீவிர திருத்தம் குறித்த தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புக்கு எதிராக திமுக தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்துறை செயலாளருமான என்.ஆர். இளங்கோ செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் கூறியதாவது:-
“சில தொகுதிகளில் படிவங்களைக் கொடுத்த மறுநாளே வாக்காளர்கள் அதைத் திருப்பித் தர வேண்டும் என்று கேட்பது எந்தச் சட்டத்தின் அடிப்படையில் என்று தெரியவில்லை. நாங்கள் அஞ்சியது போல இந்த சிறப்பு தீவிர திருத்த பணியை மிகுந்த குழப்பத்துக்கு உள்ளாக்கும் வேலைகள் நடந்து வருகின்றன. இதன் விளைவாக பல லட்சக்கணக்கான வாக்குகள் நீக்கப்படும் அபாயம் இருக்கிறது. இதைப் பட்டியலிட்டு எதிர்கொள்ளத்தான் நாங்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறோம்.
தேர்தல் ஆணையம் இந்த பணிகளுக்கு தேர்வு செய்துள்ள காலம், நடைமுறைக்கு ஒவ்வாத காலம். நவ. 4 முதல் டிச. 4 ஆம் தேதி வரை மட்டுமே கணக்கீடு படிவம் கொடுத்து வாங்கும் காலமாக இருக்கிறது. டிச. 4 ஆம் தேதிக்குள் உங்கள் படிவத்தை நிரப்பிக் கொடுக்க வேண்டும். இப்போது வடகிழக்கு பருவமழை காலம், அதனால் சிக்கல்கள் அதிகமாக இருக்கும். மேலும் நெல் அறுவடை காலம். 2026 பிப்ரவரி வரை இந்த பணிகள் நடக்கின்றன. இந்த காலத்தில் கிறிஸ்துமஸ், பொங்கல் பண்டிகை வருகிறது, தேர்தல் ஆணையம் இதை கணக்கிடவில்லை. இது அரசு ஊழியர்கள், வாக்காளர்களுக்கு சிரமமாக இருக்கும்.
அக்டோபர் 27-ல் வெளியிடப்பட்ட அறிவிப்பில் விதிமீறல்களும் சட்டமீறல்களும் உள்ளன. அதையும் உச்ச நீதிமன்றத்தில் சுட்டிக் காட்டியுள்ளோம். திமுக ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டது. ஜனநாயகத்துக்கு அடிப்படையே சரியான வாக்காளர் பட்டியல். அந்த வாக்காளர் பட்டியல் சரியாக இருக்க வேண்டும். இது அரசியல் கட்சிகளின் பணிகள் மட்டுமல்ல, ஒவ்வொரு வாக்காளருக்கும் அவருடைய வாக்குரிமையை காப்பாற்றுவது அவருடைய அடிப்படை உரிமையாகும், சட்டத்தின் பால் சார்ந்த உரிமையாகும். அதைப் பாதுகாக்க வேண்டும் என்பது திமுகவின் எண்ணம். அதற்காகத்தான் நாங்கள் போராடுகிறோம். ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாத அதிமுக அப்படித்தான் செய்வார்கள். அவர்கள் உச்ச நீதிமன்றம் செல்ல வேண்டும் என்றால் அது அவர்களுடைய உரிமை. அதை உச்ச நீதிமன்றம் சரியாகப் பதிலளிக்கும்.
பிஹார் மாநிலத்தில் இருந்து கற்ற பாடங்களின் அடிப்படையில் சில மாறுதல்களோடு தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களுக்கு தருகிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் தந்த மாறுதல்கள் அதைவிட அதிக குழப்பத்தை விளைவிப்பதாக உள்ளன. பிஹாரில் கணக்கீட்டுப் படிவத்தோடு சேர்த்து ஆவணங்களைத் தர வேண்டும். ஆனால், தமிழ்நாடு மற்றும் 12 மாநிலங்களில் கணக்கீட்டுப் படிவத்தை மட்டும் பூர்த்தி செய்து கொடுத்தால் போதும். வரைவு வாக்காளர் பட்டியல் வெளியான பிறகு டிசம்பர் 7 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவார்கள். அப்போது, வாக்காளர் பதிவு அதிகாரி ஆவணங்கள் ஒத்துப் போகாத வாக்காளர்களிடம் ஆவணங்களைக் கேட்பார். ஆனால், அவர் யார் யாரைக் கேட்பார்? எப்போது தர வேண்டும்? யாரிடம் தர வேண்டும்? பூத் அதிகாரிகள் வந்து வாங்கிக் கொள்வார்களா என்பது போன்ற எந்த தகவலும் அக்டோபர் 27 அன்று வெளியான அறிவிப்பில் தரப்படவில்லை. இதனாலேயே வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் அதிக வாக்குகளை நீக்குவதற்கு வழிகாட்டும் என்று சொல்கிறோம்” என்றார்.
DMK MP N.R. Elango has stated that due to flaws in the Special Summary Revision of the voter list that has begun in Tamil Nadu, there is a risk of losing several lakhs of votes.