பாஜகவுக்கு சாமரம் வீசுவதற்காகவே அதிமுக சிறப்பு தீவிர திருத்தத்தை ஆதரிக்கிறது என்று கூறிய திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர். இளங்கோ தேர்தல் ஆணையம் அஸ்ஸாமுக்கு மட்டும் சலுகை தருவது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் உள்ள திமுக தலைமையிடமான அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியின் சட்டத்துறை செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான என்.ஆர். இளங்கோ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
“சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் திமுகவைச் சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்கள் மட்டுமே வேலை செய்கிறார்கள் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்வைத்த குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பான செய்தி. மற்ற அரசியல் கட்சிகளின் முகவர்களுக்குக் கணக்கீட்டுப் படிவம் மறுக்கப்படுகிறது என்று கூறியதும் பொய்யான தகவல். வாக்குச்சாவடி முகவர்களை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளால் மட்டுமே நியமிக்க முடியும். அப்படி நியமிக்கப்பட்டவர்களின் பட்டியலைத் தேர்தல் ஆணையமே தனது வலைத்தளத்தில் வெளியிடும். இந்த முகவர்கள் மட்டும்தான் வாக்குச்சாவடி நிலை அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றும் தகுதி பெற்றவர்கள். சிறப்பு தீவிர திருத்தத்தைப் பொறுத்தவரை ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினுடைய வாக்குச்சாவடி முகவர், ஒரு நாளைக்கு 50 கணக்கீட்டுப் படிவங்கள் வரை பூர்த்தி செய்து கொடுக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அக்டோபர் 27 அன்றே உத்தரவில் சொல்லியிருக்கிறது.
சிறப்பு தீவிர திருத்தத்தில் உள்ள பிரச்னைகளை அறிந்து கொள்ளாமல் அதிமுகவினர் வரவேற்கிறார்கள். பாஜகவுக்கு சாமரம் வீச வேண்டும் என்பது மட்டுமே அதற்கான காரணம். ஆனால், பணிகள் தொடங்கிய பிறகு மக்களின் வாக்குகள் பறிபோகும் என்று அவர்களே அஞ்சுகிறார்கள். இதனால்தான் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஒருவரே, தனது கணக்கீட்டுப் படிவத்தைப் பூர்த்தி செய்து தருவதற்கு, திமுகவின் வாக்குச்சாவடி முகவர்கள்தான் உதவி செய்தார்கள் என்று சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தபோது, தேர்தல் ஆணையத்துடன் எந்த அரசியல் கட்சியும் கூட சேரக்கூடாது என்று கோரிக்கை விடுத்துள்ளார். மக்கள் பிரதிநிதிகளான அரசியல் கட்சிகளை இதில் பங்கெடுத்துக் கொள்ளக் கூடாது என்று அவர் சொல்வது ஜனநாயகத்திற்கு விரோதமானதாகும்.
முழுக்க முழுக்க வாக்குசாவடி நிலை அதிகாரிகளை நம்பி செயல்படும் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில், அவர்களுக்கு ஒரு நாள் மட்டுமே பயிற்சி அளிக்கப்பட்டது. வாக்குசாவடி நிலை அதிகாரிகள், மக்களிடம் உள்ள எதிர்ப்பையும், தேர்தல் ஆணையத்தின் அழுத்தத்தையும் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. படிவங்கள் முழுமையாக விநியோகிக்கப்படவில்லை. இரண்டு படிவங்கள் வர வேண்டிய இடங்களில் ஒரு படிவம் மட்டுமே வந்திருக்கிறது. இந்த நடவடிக்கையால், பல லட்சக்கணக்கான வாக்குகள் நீக்கப்படலாம் என்ற அச்சம் இருக்கிறது, இது தமிழ்நாட்டின் ஜனநாயகத்திற்குப் பேராபத்து.
அஸ்ஸாமில் சிறப்பு தீவிர திருத்தம் கொண்டு வந்தபோது, தேர்தல் ஆணைய அலுவலர்களே எல்லா கணக்கீட்டுப் படிவங்களையும் பூர்த்தி செய்து கொள்வார்கள் என்றும், வாக்காளர்கள் படிவத்தைப் பூர்த்தி செய்ய வேண்டாம் என்றும் கூறியுள்ளனர். தமிழ்நாட்டுக்கும் அஸ்ஸாமுக்கும் அப்படி என்ன பெரிய வித்தியாசம்? 12 மாநிலங்களுக்கும் அஸ்ஸாமுக்கும் ஏன் இந்த வித்தியாசம் காட்டுகிறீர்கள்” என்றார்.
DMK MP Advocate NR Elango criticized that AIADMK Supports Special Intensive Revision only for the sake of BJP.