படம்: https://x.com/V_Senthilbalaji/
தமிழ்நாடு

கரூர் தொகுதி மக்களுக்கு செந்தில்பாலாஜி வழங்கிய தீபாவளி பரிசு! | Diwali | SenthilBalaji |

இனிப்பு, காரத்துடன் சில்வர் அண்டா வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

கிழக்கு நியூஸ்

கரூர் சட்டப்பேரவைத் தொகுதி மக்களுக்கு தீபாவளி பரிசாக இனிப்பு, காரத்துடன் சில்வர் அண்டாவை வழங்கியுள்ளார் திமுக எம்எல்ஏ-வும் முன்னாள் அமைச்சருமான வி. செந்தில்பாலாஜி.

நாடு முழுக்க அக்டோபர் 20 அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இப்பண்டிகையை முன்னிட்டு கரூர் சட்டப்பேரவைத் தொகுதி மக்களுக்கு செந்தில்பாலாஜி எம்எல்ஏ பரிசுப் பொருள்களை வழங்கியுள்ளார்.

தீபாவளி பரிசாக இனிப்பு மற்றும் காரத்தை வழங்கியுள்ளார். இத்துடன் சில்வர் அண்டாவும் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. சில்வர் அண்டாவின் மூடியில் செந்தில்பாலாஜியின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் புகைப்படங்கள் அச்சிடப்பட்ட பையில் வைத்து பரிசுப் பொருள்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

தொகுதி மக்களுக்கு தீபாவளி பரிசு வழங்கும் நிகழ்வை செந்தில்பாலாஜி கோடங்கிப்பட்டியில் தொடக்கி வைத்தார். வீடு வீடாகச் சென்று அவர் பரிசுப் பொருள்களை வழங்கினார். இந்தக் கோடங்கிப்பட்டி 48-வது வார்டின் கீழ் வருகிறது. துணை மேயர் ப. சரவணன், மாநகராட்சி மண்டலக் குழுத் தலைவர்கள் எஸ்.பி. கனகராஜ், ஆர்எஸ் ராஜா, சக்திவேல், 48-வது வார்ட் மாமன்ற உறுப்பினர் பழனிசாமி உள்ளிட்டோர் செந்தில்பாலாஜியின் பரிசுப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள்.

முன்னதாக, கோடங்கிப்பட்டியில் உள்ள ஸ்ரீபட்டாளம்மன் கோயிலில் பரிசுப் பொருள்களை வைத்து வழிபட்டார் செந்தில்பாலாஜி. பரிசுப் பொருள்களுக்குக் கோயிலில் பூஜை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக புகைப்படங்களைப் பகிர்ந்து எக்ஸ் தளப் பக்கத்தில் செந்தில்பாலாஜி எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

"எளிய மக்களுக்கு என்றும் உரியவர், தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் நல்லாசிகளுடன், தமிழ்நாடு துணை முதல்வர், இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ஆசிகளுடன், வருகின்ற தீபாவளி திருநாளை முன்னிட்டு, என் மீது எப்போதும் பேரன்பு கொண்ட எனதருமை கரூர் சொந்தங்களுக்கு அன்புப் பரிசு வழங்கிடும் நிகழ்வை, இன்று கரூர், கோடங்கிப்பட்டியில் துவக்கி வைத்த போது" என்று செந்தில்பாலாஜி குறிப்பிட்டுள்ளார்.

Diwali | Senthilbalaji | Karur | Diwali Gift |