தமிழ்நாடு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றியை உறுதி செய்த திமுக!

இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமாக சுமார் 76,298 வாக்குகள் பெற்றார் திமுக வேட்பாளர் வி.சி. சந்திரகுமார்.

ராம் அப்பண்ணசாமி

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ஆரம்பம் முதலே முன்னிலை பெற்று வந்த திமுக வேட்பாளர் வி.சி. சந்திரகுமார், பிற்பகல் 3 மணி அளவில் தன் வெற்றியை உறுதிசெய்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்தாண்டு டிசம்பர் 14-ல் உயிரிழந்தார். இதனையடைத்து காலியானதாக அறிவிக்கப்பட்ட ஈரோடு கிழக்கு தொகுதிக்கு, கடந்த பிப்.5-ல் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதிமுக மற்றும் பாஜக கூட்டணிக் கட்சிகள் இந்த இடைத்தேர்தலை புறக்கணித்ததை அடுத்து, திமுக மற்றும் நாம் தமிழர் கட்சிகளுக்கு இடையே ஈரோடு கிழக்கில் இரு முனைப்போட்டி நிலவியது.

இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (பிப்.8) காலை 8 மணிக்குத் தொடங்கியது. வாக்கு எண்ணிக்கையின் தொடக்கம் முதலே முன்னிலை பெற்றுள்ளார் திமுக வேட்பாளர் வி.சி. சந்திரகுமார்.

பிற்பகல் 3 மணி நிலவரப்படி திமுக வேட்பாளர் சந்திரகுமாருக்கு 76,298 வாக்குகள் கிடைத்துள்ளன. இதன் மூலம் இடைத்தேர்தலில் பதிவாக வாக்குகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமாக வாக்குகளை அவர் பெற்று வெற்றியை உறுதி செய்துள்ளார். நாதக வேட்பாளர் சீதாலட்சுமி 16,543 வாக்குகள் மட்டுமே பெற்று பின்தங்கி உள்ளார்.