கோப்புப்படம் ANI
தமிழ்நாடு

லஞ்சம், ஊழல் செய்வதைத் தவிர திமுகவுக்கு வேறு எதுவும் தெரியாது: பிரேமலதா விஜயகாந்த்

ராம் அப்பண்ணசாமி

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள் தொடர்பாக திமுக அரசைக் கண்டித்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தியது தேமுதிக. இந்த ஆர்ப்பாட்டத்தில் பிரேமலதா பேசியது:

`மக்களுக்காக உழைத்து உயிரிழந்த எத்தனையோ பேர் இருக்கின்றனர். அவர்களுக்கு எல்லாம் இந்த அரசு என்ன கொடுத்திருக்கிறது? இன்றைக்கு கள்ளச்சாராயம், டாஸ்மாக், கஞ்சா போன்றவற்றை விற்று கோடிக்கணக்கில் சம்பாதித்து அதை வைத்து ஓட்டுக்குக் காசு குடுத்து, லஞ்சம் ஊழல் செய்வதைத் தவிர இந்த திமுகவுக்கு எதுவும் தெரியாது’.

`அவர்களைப் பொருத்தவரை அடுத்த தேர்தலை நோக்கிக் போகிறார்களே ஒழிய, மக்களின் எதிர்காலத்தை நோக்கிப் போகவில்லை. இந்த வருடம் 45 ஆயிரம் கோடி, அடுத்த வருடம் 50 ஆயிரம் கோடி, அதற்கு அடுத்த வருடம் 55 ஆயிரம் கோடி (டாஸ்மாக்) வருமானம் என்று இலக்கு வைக்கின்றனர். உங்களுக்குக் கொஞ்சம் கூட வெக்கம் மானம் இல்லையா?’

’இங்கே லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை இல்லாமல் இருக்கிறார்களே, இவர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தித் தர இந்தப் பகுதியில் ஏதாவது தொழிற்சாலை கொண்டுவரப்பட்டுள்ளதா? கஷ்டப்பட்டு உழைக்கும் மக்களைப் பார்க்கும்போது மனசு வலிக்கிறது. நம் மக்களை இந்த நிலைமைக்குக் கொண்டு சென்றது யார்? நிர்வாகத் திறமையற்ற லஞ்ச, ஊழலுக்கு மட்டுமே பேர் போன இந்த திமுக அரசுதான் காரணம்’

’வெகு விரைவில் இந்த திமுக அரசை மக்களே விரட்டி அடிக்கும் நேரம் வரும். அதற்கு இந்தக் கள்ளக்குறிச்சி மக்களின் எதிர்ப்பை நாம் பதிவு செய்துள்ளோம். எத்தனையோ பெண்கள் இந்த விஷச்சாராய சம்பவத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்து மக்கள் சார்பில் நாங்கள் முறையிடப்போகிறோம்’.