ஒடுக்கப்பட்ட மக்களுக்காகத் தொடர்ந்து, போராடிக்கொண்டிருப்பது திமுக என கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தெரிவித்துள்ளார்.
சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் ‘பெரியார் விஷன்’ ஓடிடி தளத்தின் தொடக்க விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கனிமொழி, ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பாக பா. இரஞ்சித்தின் கருத்து, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள நிதிநிலை அறிக்கை, நீட் தேர்வு, துணை முதல்வர் பதவி தொடர்புடையக் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
"நமக்கு வர வேண்டிய நிலுவைத் தொகை, தமிழ்நாட்டுக்கான திட்டங்கள், ரயில்வே திட்டங்கள் எனப் பல கோரிக்கைகள் உள்ளன. தேர்தலுக்குப் பிறகு கற்றுக்கொண்ட பாடங்களை உணர்ந்து, வரக்கூடிய நிதிநிலை அறிக்கையில் எல்லோருக்குமான நியாயம் கிடைக்க வேண்டும்.
நீட் தேர்வைப் பொறுத்தவரை திமுகவின் நிலைப்பாடு ஒன்றுதான். நீட் தேர்வு மாணவர்களுக்கு எதிரானது. இதைத் தாண்டி, வாய்ப்புகள் வசதிகள் இல்லாத பிள்ளைகள், அவர்களுக்கு மருத்துவக் கல்வி என்பது எட்டாத கனவாக மாறிவிடும் என்பதைதான் திமுக தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. எல்லோரும் உணரக்கூடிய சூழலில் இன்று வெளிப்படையாக வந்துள்ளது. நீட் வேண்டாம் என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு.
ஆம்ஸ்ட்ராங் கொலை விவகாரத்துக்குள் செல்ல விரும்பவில்லை. நிச்சயமாக, ஒடுக்கப்பட்ட மக்களுக்காகத் தொடர்ந்து போராடிக்கொண்டிருப்பது திமுக. ஒரு குற்றம் நடக்கும்போது, அதை யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தக் குற்றத்துக்குக் காரணமாக இருப்பவர்கள் சட்டத்தின் முன் கொண்டு வரப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்பதுதான் திமுகவின் நிலைப்பாடு.
துணை முதல்வர் குறித்து முதல்வர், கட்சித் தலைவர் எடுக்க வேண்டிய முடிவு" என்றார் கனிமொழி.