தமிழ்நாடு

திமுக நம்மை ஏமாற்றிவிட்டது: மகளிர் தின வாழ்த்துடன் அரசியல் பேசிய விஜய்!

பாதுகாப்பின்மையை உணரும்போதும் எப்படி சந்தோஷமாக இருப்பது என நீங்கள் நினைப்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.

ராம் அப்பண்ணசாமி

மகளிர் தினத்தை ஒட்டி, தமிழக பெண்களுக்கு வாழ்த்து தெரிவித்த தவெக தலைவர் விஜய், பெண்களுக்கான பாதுகாப்பை தடுக்கத் தவறியதற்காக திமுக அரசை சாடியுள்ளார்.

தவெகவின் அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் இன்று (மார்ச் 8) வெளியிடப்பட்ட காணொளியில் விஜய் கூறியதாவது,

`அனைவருக்கும் வணக்கம். இன்றைக்கு மகளிர் தினம். தமிழ்நாடு முழுவதும் இருக்கும் என்னுடைய தாய், அக்கா, தங்கை, தோழி ஆகிய உங்கள் அனைவருக்கும் இந்த தினத்தில் வாழ்த்து கூறாமல் இருக்க முடியாது. உங்கள் அனைவருக்கும் என்னுடைய மகளிர் தின வாழ்த்துகள். சந்தோஷமாக இருக்கிறீர்களா?

`பாதுகாப்பாக இருந்தால்தானே சந்தோஷத்தை உணர முடியும்? எந்த பாதுகாப்பும் இல்லாதபோதும், பாதுகாப்பின்மையை உணரும்போதும் எப்படி சந்தோஷமாக இருப்பது’ என நீங்கள் நினைப்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. என்ன செய்வது?

நீங்கள், நான் என நாம் அனைவரும் இணைந்துதான் திமுக அரசைத் தேர்ந்தெடுத்தோம். ஆனால் அவர்கள் இப்படி நம்மை ஏமாற்றுவார்கள் என்பது இப்போதுதான் தெரிகிறது. அனைத்துமே இங்கு மாறக்கூடியதுதானே? மாற்றத்திற்கு உரியதுதானே? கவலைப்படவேண்டாம்.

2026-ல் நீங்கள் அனைவரும் இணைந்து, இல்லை நாம் அனைவரும் இணைந்து, மகளிருக்கான பாதுகாப்பை உறுதிசெய்யத் தவறியவர்களை மாற்றுவோம். அதற்கு, இந்த மகளிர் தினமான இன்று நாம் அனைவரும் இணைந்து உறுதியேற்போம்.

ஒன்றை மட்டும் கூறிக்கொள்ள விரும்புகிறேன். அனைத்துவிதமான சூழ்நிலைகளிலும் உங்களின் மகனாக, அண்ணனாக, தம்பியாக, தோழனாக, உங்களுடன் நான் நிற்பேன். நன்றி, வணக்கம்’ என்றார்.