ANI
தமிழ்நாடு

சட்டப் பேரவைக்குள் திமுகவினர் குட்கா கொண்டு சென்ற வழக்கு: ஜூலை 31-ல் தீர்ப்பு

கடந்த சட்டப் பேரவை நடவடிக்கைகள் அந்த ஆட்சியுடன் முடிந்துவிட்டன

ராம் அப்பண்ணசாமி

தமிழ்நாடு சட்டப் பேரவைக்குள் திமுக எம்.எல்.ஏ.க்கள் குட்கா கொண்டு சென்ற வழக்கில் நாளை மறுநாள் (ஜூலை 31) தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

முந்தைய அதிமுக ஆட்சியில் சட்டப் பேரவைக்குள் மு.க. ஸ்டாலின் உட்பட திமுக எம்.எல்.ஏ.க்கள் குட்கா கொண்டு சென்றனர். தமிழ்நாட்டில் குட்காவுக்கு தடை விதிக்கப்பட்டிருந்ததால், இந்த விவகாரத்தில் அப்போது திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக நோட்டீஸ் பிறப்பித்தது அன்றைய சட்டப் பேரவை உரிமை மீறல் குழு.

இதை அடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உரிமை மீறல் குழுவின் நோட்டீஸுக்கு எதிராகத் தடை வாங்கினார்கள் திமுக எம்.எல்.ஏ.க்கள். இந்த தடையை எதிர்த்து அன்றைய தமிழ்நாடு சட்டப்பேரவைச் செயலாளர் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு தொடர்பாக நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியன், குமரப்பன் அமர்வு விசாரித்து வந்தது. கடந்த முறை நடந்த விசாரணையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினருக்கு நோட்டீஸ் அனுப்பியது உயர் நீதிமன்றம். இது தொடர்பாக இன்று (ஜூலை 29) காலை விசாரணை தொடங்கியது.

இந்த விசாரணையில் முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் சார்பில் ஆஜரான வழக்கறிஞரும், மாநிலங்களவை எம்.பி.யுமான என்.ஆர். இளங்கோ, `கடந்த 2011-ல் தமிழ்நாட்டில் குட்கா தயாரிக்கவும், விற்பதற்கும் தடை விதிக்கப்பட்டது. இருந்தாலும் தமிழ்நாட்டில் இது சட்டவிரோதமாக நடந்து வந்தது. திமுகவினர் கொண்டு சென்றது அதற்கான தடையங்கள். கடந்த சட்டப் பேரவை நடவடிக்கைகள் அந்த ஆட்சியுடன் முடிந்துவிட்டன’ என்றார்.

அன்றைய துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், `உரிமை மீறல் குழு அளித்த நோட்டீஸை எதிர்த்துதான் திமுகவினரால் வழக்கு தொடரப்பட்டு, அதற்குத் தடையும் வாங்கப்பட்டது’ என்று வாதாடினார்.

இதை அடுத்து நாளை எழுத்துப் பூர்வமாக பதில் தாக்கல் செய்ய அவகாசம் கேட்டார் திமுக வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ. எனவே திமுக வழக்கறிஞருக்கு அவகாசம் வழங்கி இந்த விவகாரத்தில் நாளை மறுநாள் (ஜூலை 31) தீர்ப்பு வழங்குவதாக நீதிபதிகள் அறிவித்தனர்.