மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசுக்கா நீங்கள் வாக்களிக்கப் போகிறீர்கள் என்று நடிகர் விஜய் கேள்வி எழுப்பினார்.
தமிழகம் முழுவதும் தனது முதல் தேர்தல் பரப்புரைக்கான சுற்றுப் பயணத்தை விஜய் மேற்கொண்டுள்ளார். அந்த வகையில், திருச்சி காந்தி மார்க்கெட், மரக்கடி பகுதியை வந்தடைந்த விஜய், பிரசார வாகனத்தின் மீது ஏறி நின்று உரையாற்றினார்.
அவர் பேசியதாவது :
”உங்கள் அனைவரையும் பார்த்துவிட்டுப் போகலாம் என்று வந்திருக்கிறேன். போருக்குப் போவதற்கு முன் குலதெய்வம் கோயிலுக்குச் செல்வார்கள். அதைப்போல் நான் திருச்சிக்கு வந்திருக்கிறேன். திருச்சியில் தொடங்கும் எல்லாமே திருப்பு முனையாக அமையும் என்று சொல்வார்கள். அண்ணா, எம்ஜிஆர் ஆகியோர் மாநாடுகளை நடத்திய மண். பெரியார் வாழ்ந்த மண். மலைக்கோட்டை இருக்கும் இடம். கல்விக்கும், மதச்சார்பின்மைக்கும், மத நல்லிணக்கத்திற்கு பேர் போன கொள்கை மண் இது.
திமுக பல வாக்குறுதிகளைக் கொடுத்ததே அதையெல்லாம் நிறைவேற்றியதா? டீசல் விலை ரூ. 3 குறைக்கப்படும் என்றீர்களே, செய்தீர்களா? மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும் என்றீர்களே, செய்தீர்களா? அரசுப் பணியில் உள்ள 2 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றீர்களே, செய்தீர்களா? மக்கள் நலப் பணியாளர்கள் நிரந்தரம் செய்யப்படாதது ஏன்? அரசு வேலை பெண்களுக்கு 40% கொடுப்பதாகச் சொன்னது என்ன ஆனது? வேலைவாய்ப்புகளில் 75% தமிழர்களுக்கே என்று சொன்னீர்களே செய்தீர்களா?
திருச்சியில் 9 தொகுதிகள் உள்ளன. இதில், காவிரி நீர் பிரச்னையை சரி செய்தீர்களா? மாரிஸ் ரயில்வே மேம்பாலத்தை எப்போது கட்டி முடிப்பார்கள்? மெட்ரோ ரயில் வேலைகள் எப்போது தொடங்கும் என்று தெரியவில்லை? சிறுகனூரில் தொழிற்சாலைகளால் நிலத்தடி நீர் கெட்டுப்போய் இருக்கிறது, அதைக் கவனிக்கவில்லை. மேலும், முக்கியமான பிரச்னை, நாடறிந்த பிரச்னையான கிட்னி திருட்டு திருச்சியில் அதிகமாக நடக்கிறது. குறிப்பாக திமுக எம்.எல்.ஏவுக்கு சொந்தமான மருத்துவமனையில் நடக்கிறது. அதைத் தடுக்க முடியவில்லை. திருச்சியின் மக்கள் பிரச்சனைகளை தீர்க்காமல் மணல் அள்ளுவதில் நன்றாக காசு பார்க்கிறார்கள்.
திருச்சி மாவட்டத்தில் இருந்து இரண்டு அமைச்சர்கள் இருந்துமா இவ்வளவு பிரச்னைகள்? வரும் தேர்தலில் இவர்களுக்கா மீண்டும் வாக்களிக்கப் போகிறீர்கள்? மகளிருக்கு ரூ. 1000 மாதம் தோறும் கொடுத்துவிட்டு, பணம் கொடுக்கிறோம் பணம் கொடுக்கிறோம் என்று பேசுகிறார்கள். இலவசமாக மகளிருக்கு பேருந்து விட்டுவிட்டு, ஓசியில் செல்வதாக விமர்சிக்கிறார்கள். இவர்களுக்கா மீண்டும் வாக்களிக்கப் போகிறீர்கள்?
இவ்வளவு கேள்வி கேட்கிறாயே நீ என்ன செய்யப் போகிறாய் என்று கேட்கிறீர்களா? மற்றவர்களைப் போல் பொய்களை வாக்குறுதிகளாக தவெக கொடுக்காது. நடைமுறைக்கு சாத்தியமான வாக்குறுதிகளை மட்டுமே கொடுப்போம். அடிப்படை வசதிகளை வழங்குவதில், பெண்கள் பாதுகாப்பு வழங்குவதில் சட்டம் ஒழுங்கை காப்பாற்றுவதில் எந்த சமரசமும் செய்து கொள்ள மாட்டோம்” இவ்வாறு பேசினார்.
விஜய்யின் பேச்சின்போது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் சரியாகக் கேட்கவில்லை. அதனால் பேச்சை விரைவாக முடித்துக்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
TVK Vijay | Vijay | Vijay Tour | Tamilaga Vettri Kazhagam | Trichy |