தமிழ்நாடு

திருநெல்வேலி மேயர் தேர்தலில் வெற்றி பெற்றார் திமுக வேட்பாளர் கோ. ராமகிருஷ்ணன்

முன்பு திமுகவிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட 6-வது வார்டு உறுப்பினர் வி. பவுல்ராஜூம் மேயர் தேர்தலில் போட்டியிட வேட்புமனுத்தாக்கல் செய்தார்

ராம் அப்பண்ணசாமி

திருநெல்வேலி மாநகராட்சியின் புதிய மேயரைத் தேர்தெடுக்க இன்று (ஆகஸ்ட் 5) நடந்த ரகசிய வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளார் திமுக வேட்பாளர் கிட்டு என்கிற கோ. ராமகிருஷ்ணன்.

திருநெல்வேலி மாநகராட்சியின் 55 இடங்களுக்குக் கடந்த பிப்ரவரி 2022-ல் தேர்தல் நடந்தது. இதில் 50 இடங்களைக் கைப்பற்றியது திமுக கூட்டணி. இதை அடுத்து நடந்த ரகசிய வாக்கெடுப்பில் திமுகவைச் சேர்ந்த 16-வது வார்டு உறுப்பினர் பி.எம். சரவணன் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆனால் திமுகவைச் சேர்ந்த வார்டு உறுப்பினர்களுக்கும், மேயர் சரவணனுக்கு இடையே ஆரம்பம் முதல் ஒத்துப்போகவில்லை. திமுக அமைச்சர் தங்கம் தென்னரசு பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் இந்தப் பிரச்னை முடிவுக்கு வரவில்லை. இதை அடுத்து கடந்த ஜூலை 3-ல் மேயர் பதவியை ராஜினாமா செய்தார் சரவணன்.

காலியாக இருக்கும் திருநெல்வேலி மேயர் பதவிக்கு ஆகஸ்ட் 5-ல் தேர்தல் நடைபெறும் என்று அறிவித்தது திருநெல்வேலி மாநகராட்சி. இந்நிலையில் நேற்று (ஆகஸ்ட் 4) நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக 25-வது வார்டு உறுப்பினர் கிட்டு என்கிற கோ. ராமகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டார்.

மேயர் தேர்தலுக்கு முன்பு இன்று காலை வேட்புமனுத்தாக்கல் செய்தார் கோ. ராமகிருஷ்ணன். போட்டியின்றி புதிய மேயராக ராமகிருஷ்ணன் தேர்தெடுக்கப்படுவார் என்ற சூழல் நிலவியபோது, முன்பு மேயர் சரவணன் உடன் ஏற்பட்ட பிரச்சனையால் திமுகவிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட 6-வது வார்டு உறுப்பினர் வி. பவுல்ராஜூம் மேயர் தேர்தலில் போட்டியிட வேட்புமனுத்தாக்கல் செய்தார்.

இதனால் புதிய மேயரைத் தேர்ந்தெடுக்க ரகசிய வாக்கெடுப்பு நடந்தது. இதில் வார்டு உறுப்பினர்கள் வாக்களித்தனர். வாக்கெடுப்புக்குத் தாமதமாக வந்த முன்னாள் மேயர் சரணவன் வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை என்ற தகவல் வெளியானது.

ரகசிய வாக்குப்பதிவு முடிந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையின் முடிவில் திமுகவின் அதிகாரபூர்வ வேட்பாளரான கிட்டு என்கிற கோ. ராமகிருஷ்ணன் 30 வாக்குகள் பெற்று தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ராமகிருஷ்ணனை எதிர்த்துப் போட்டியிட்ட பவுல்ராஜூக்கு 23 வாக்குகள் கிடைத்துள்ளன.