கோவை திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் (கோப்புப்படம்) 
தமிழ்நாடு

கோவையில் சட்டத்தை மீறி செயல்படும் பாஜக: திமுக வேட்பாளர்

கிழக்கு நியூஸ்

கோவையில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை மற்றும் பாஜகவினர் சட்டத்தை மீறி செயல்படுவதாக கோவை திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் ஆவாரம்பாளையத்தில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை நேற்றிரவு 10 மணிக்கு மேல் பிரசாரம் மேற்கொண்டதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் பிரசாரம் மேற்கொண்டிருந்தபோது, சட்டத்துக்குப் புறம்பானது எனக் கேட்கச் சென்ற திமுகவினர் மீது கோவை மாவட்டத்தைச் சேராத சிலர் தாக்குதல் நடத்தியதாக திமுக தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, கோவையில் இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்த திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் கூறியதாவது:

"தேர்தல் தோல்வி பயத்தில் பாஜகவினர் இடையூறு செய்யத் திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது. இதற்கு முதல் உதாரணம் நேற்றைய சம்பவம். அமைதியைக் காத்து அமைதியை விரும்பும் கோவை மக்களுக்கு இந்தத் தேர்தலை எப்படி கொண்டு போகப்போகிறார்கள் என்கிற ஐயம் வந்துள்ளது.

தேர்தல் ஆணையம், காவல் துறை இதுகுறித்து கடுமையான நடவடிக்கை எடுத்து, நடுநிலையுடன் தேர்தலை நடத்த வேண்டும். தோல்வி பயத்தில் ஏதேனும் ஒரு ரூபத்தில் இடையூறு ஏற்படுத்தலாம் என்கிற சந்தேகம் எங்களுக்கு எழுந்துள்ளது. கோவையில் ஒரு கலவரத்தையோ, சட்டத்தை மீறி நடப்பதையோ ஏற்றுக்கொள்ள முடியுமா?

தேரத்ல் ஆணையம் சரியான வழியில் செல்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும். சட்டரீதியாக என்ன செய்ய வேண்டுமோ, அதைச் செய்ய வேண்டும். நாங்கள் ஆளுங்கட்சியாக இருந்தாலும், சட்டத்துக்குள்பட்டு நடக்கிறோம். ஆனால், பாஜக சட்டத்தை மீறி நடக்கிறது" என்றார் அவர்.