தமிழ்நாடு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் அறிவிப்பு!

திமுகவின் கொள்கை பரப்பு இணைச் செயலாளராகப் பொறுப்பு வகித்துவருகிறார்.

ராம் அப்பண்ணசாமி

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில், திமுக வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ. வி.சி. சந்திரகுமார் அறிவிக்கப்பட்டுள்ளார்.

கடந்தாண்டு டிச.14-ல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானதைத் தொடர்ந்து, ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி 5-ல் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி களமிறங்கும் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், `2026 சட்டப்பேரவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இண்டியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளர் நிறுத்தப்படுவார்’ என நேற்று அறிக்கை வெளியிட்டார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை.

இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான திமுக வேட்பாளராக அக்கட்சியின் கொள்கை பரப்பு இணைச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வி.சி. சந்திரகுமார் அறிவிக்கப்பட்டுள்ளார்.

அதிமுகவில் தன் அரசியல் வாழ்வைத் தொடங்கிய வி.சி. சந்திரகுமார், கடந்த 2005-ல் தேமுதிகவை விஜயகாந்த் தொடங்கியபோது அக்கட்சியில் ஐக்கியமானார். பின்னர் அதன் கொள்கை பரப்புச் செயலாளராக உயர்ந்தார். 2011 சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலில், ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார் சந்திரகுமார்.

பிறகு, கருத்து வேறுபாடு காரணமாக தேமுதிகவில் இருந்து விலகித் திமுகவில் இணைந்த சந்திரகுமாருக்கு அக்கட்சியின் கொள்கை பரப்பு இணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. 2016 சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு அதிமுக வேட்பாளர் கே.எஸ். தென்னரசுவிடம், தோல்வி அடைந்தார் சந்திரகுமார்.

இந்நிலையில், தற்போது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் வி.சி. சந்திரகுமார்.