சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக திமுக மனு. 
தமிழ்நாடு

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: உச்ச நீதிமன்றத்தில் திமுக வழக்கு | Special Intensive Revision | DMK |

"சட்டப்பேரவைத் தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர திருத்தம் என்பது தேவையற்றது."

கிழக்கு நியூஸ்

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்வதற்கான அறிவிப்புக்குத் தடை கோரி திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ளது. இதற்கு முன்னதாக இங்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதற்கு திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதிமுக உள்ளிட்ட கட்சிகள் வரவேற்பு தெரிவித்து வருகின்றன.

இதுதொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை தியாகராய நகரில் அனைத்துக் கட்சிக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை நாட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் தளப் பக்கத்தில் இதுதொடர்பாக பதிவிடுகையில், "வாக்காளர் பட்டியல் திருத்தத்தைக் குழப்பங்கள் - ஐயங்கள் இல்லாமல் போதிய கால அவகாசத்துடன், 2026 பொதுத் தேர்தலுக்குப் பின்பு நடத்த வேண்டும் என்ற நமது கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்காததால், உச்ச நீதிமன்றத்தை நாட இன்றைய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் பங்கேற்றுத் தங்களுடைய உணர்வைப் பதிவு செய்த 49 கட்சிகளின் தலைவர்களுக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், சிறப்பு தீவிர திருத்தம் தொடர்புடைய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் திமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பிஹாரில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தீவிர திருத்தத்தில் ஏற்கெனவே பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக திமுகவின் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

சிறப்பு தீவிர திருத்தம் தொடர்புடைய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புக்குத் தடை விதிக்க வேண்டும் சிறப்பு தீவிர திருத்தப் பட்டியல் நடவடிக்கையைக் கைவிட வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது எனச் செய்திகள் வெளியாகின்றன. மேலும், சட்டப்பேரவைத் தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர திருத்தம் என்பது தேவையற்றது என்று திமுக தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

DMK approaches Supreme Court on Special Intensive Revision after passing a resolution on the same in All Party Meeting held on Sunday.

Special Intensive Revision | Tamil Nadu | All Party Meet | All Party Meeting | DMK | Supreme Court |