மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியினர் போராட்டம்  
தமிழ்நாடு

தமிழ்நாட்டிலிருந்து ஒலிக்கும் இந்திய விவசாயிகளின் குரல்: முதலமைச்சர் ஸ்டாலின் பதிவு | MK Stalin |

தமிழ்நாடு முழுவதும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மத்திய பாஜக, அதிமுகவை எதிர்த்துப் போராட்டம்...

கிழக்கு நியூஸ்

தமிழ்நாட்டில் இருந்து ஒலிக்கும் ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளின் குரலை மத்திய பாஜக ஆட்சியாளர்கள் உணர வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கு மாற்றாக விக்சித் பாரத் - கேரன்டி ஃபார் ரோஸ்கர் மற்றும் அஜீவிகா (விபி ஜி ராம் ஜி) என்ற சட்ட மசோதா நேற்று (டிச. 18) பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

‘விபி ஜி ராம் ஜி’ சட்டம் என்றால் என்ன?

இதன் மூலம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் உள்ள 100 நாள் வேலையை 125 நாள்களாக உயர்த்தப்படவுள்ளது. மேலும், தொழிலாளர்களுக்கான ஊதியத்தின் மொத்தச் செலவில் 40% மாநில அரசும் 60% மத்திய அரசும் ஏற்கும் நடைமுறை ஏற்படுத்தப்படவுள்ளது. இதையடுத்து, இந்த நடைமுறை மூலம் திட்டத்திலிருந்து மகாத்மா காந்தியின் பெயரை நீக்குவதாகவும், மாநிலங்களின் நிதிச்சுமை அதிகரிப்பதாகவும் குற்றம்சாட்டி, எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

எதிர்க்கட்சியினர் போராட்டம்

இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கிராமப்புற மக்களுக்கான 100 நாள் வேலைத் திட்டத்தை ஒழிக்கும் சட்டத்தைக் கொண்டு வந்திருப்பதாக மத்திய பாஜக அரசையும், அதற்கு துணைபோகும் அதிமுகவையும் கண்டித்து இன்று போராட்டம் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டம் தொடர்பான படங்களை பகிர்ந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

முதலமைச்சரின் எக்ஸ் பதிவு

அதில் முதலமைச்சர் கூறியிருப்பதாவது:- “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தை மீட்டெடுக்கவும், தங்களது வாழ்வாதாரத்தைக் காத்துக்கொள்ளவும் தமிழ்நாடு முழுவதும் 389 இடங்களில் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்த ஏழை விவசாயக் கூலித் தொழிலாளர்கள். இது தமிழ்நாட்டில் இருந்து ஒலிக்கும் ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளுக்கான குரல் என்பதை, அண்ணல் காந்தியின் மீது வெறுப்புணர்வோடு செயல்படும் மத்திய பாஜக ஆட்சியாளர்கள் உணர வேண்டும்! ஏழைகளின் வாழ்வாதாரத்தை உறுதிசெய்ய வேண்டும்!” என்று பதிவிட்டுள்ளார்.

Tamil Nadu Chief Minister M.K. Stalin has said that the central BJP rulers should listen to the voice of the entire Indian farmers from Tamil Nadu.