கோப்புப்படம் படம்: https://www.instagram.com/lksudhish/
தமிழ்நாடு

விஜயகாந்த் நினைவு நாள்: முதல்வர் ஸ்டாலினுக்கு தேமுதிக அழைப்பு

"காலை 8.30 மணியளவில் தேமுதிகவின் அனைத்து மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் மௌன ஊர்வலம் நடத்தத் திட்டமிட்டுள்ளோம்."

கிழக்கு நியூஸ்

விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வில் பங்கேற்க முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு தேமுதிக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தேமுதிக துணைப் பொதுச்செயலாளர் எல்.கே. சுதீஷ், விஜய பிரபாகரன் ஆகியோர் முதல்வருக்கு அழைப்பு விடுத்துள்ளார்கள்.

இதைத் தொடர்ந்து, அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த எல்.கே. சுதீஷ் கூறியதாவது:

"வரும் 28 அன்று விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, தேமுதிக சார்பில் நினைவு தினத்தைக் கொண்டாடவுள்ளோம். இந்த நிகழ்வுக்காக தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்தித்து, நாங்கள் அழைப்பிதழைக் கொடுத்து வந்துள்ளோம். இதன் அடிப்படையில் தமிழக முதல்வரைச் சந்தித்து அழைப்பு கொடுத்துள்ளோம்.

அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பிதழ் கொடுக்கிறோம். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து அழைப்பு கொடுத்துள்ளோம். முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தைச் சந்தித்து அழைப்பு கொடுத்துள்ளோம். இதுபோல அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்தித்து அழைப்பு கொடுக்கவுள்ளோம்.

அன்றைய நாள் காலை 8.30 மணியளவில் தேமுதிகவின் அனைத்து மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் மௌன ஊர்வலம் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். இதற்குக் காவல் துறை அனுமதி கோரியுள்ளோம். அனுமதி கிடைத்த பிறகு, ஏறத்தாழ 1 கி.மீ. தொலைவிலிருந்து மௌன ஊர்வலம் நடந்து, கட்சித் தலைமை அலுவலகத்தைச் சென்று, விஜயகாந்தின் ஆலயத்தைச் சென்றடையவுள்ளோம்.

முதல்வருக்கு அழைப்பு விடுத்துள்ளோம். அவர் நிச்சயமாக வருவார்.

அன்றைய நாள் வரும் மக்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படும். அந்தந்த மாவட்டங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும்.

எங்களைப் பொறுத்தவரை விஜயகாந்த் எங்களுக்குக் குரு. எனவே, மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதலாம் ஆண்டு குருபூஜை எனப் பெயர் வைத்துள்ளோம்.

கடந்த ஓராண்டாக கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் என ஒரு நாளைக்கு இரண்டாயிரம், மூன்றாயிரம் பேர் இங்கு வந்து செல்கிறார்கள். சனி மற்றும் ஞாயிறுகளில் 5 ஆயிரம் பேர் வருகிறார்கள். பண்டிகை நாள்களில் சுமார் 10 ஆயிரம் பேர் வருகிறார்கள். அதுவொரு கோயிலைப் போல மாறிவிட்டது. அதனால், தேமுதிக சார்பில் ஆண்டுதோறும் குருபூஜை நடத்தப்படும்" என்றார் சுதீஷ்.