திமுகவுடன் கூட்டணியில் இணைந்த தேமுதிக https://x.com/mkstalin
தமிழ்நாடு

திமுகவுடன் கூட்டணியில் இணைந்த தேமுதிக: முதலமைச்சரைச் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த் | DMDK |

கட்சி நிர்வாகிகள், தொண்டர்களின் விருப்பத்திற்கு இணங்க திமுகவுடன் முதன்முறையாக தேமுதிக கூட்டணி...

கிழக்கு நியூஸ்

கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் விருப்பப்படி திமுகவுடன் தேமுதிக கூட்டணியில் இணைந்துள்ளது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் தங்கள் கூட்டணி நிலைப்பாட்டை உறுதிப் படுத்துவதில் மும்முரம் காட்டி வருகின்றன. பாஜக - அதிமுக இணைந்துள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியில் டிடிவி தினகரனின் அமமுக மற்றும் அன்புமணி ராமதாஸ் தரப்பு பாமக இணைந்து வலுவடைந்துள்ளது. மறுபுறம் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்குள் காங்கிரஸ் கட்சி ஆட்சி அதிகாரத்தில் பங்கு கோரி வருகிறது. இதனால் திமுக - காங்கிரஸ் கூட்டணிக்குள் குழப்பம் நிலவி வருகிறது.

திமுகவா? அதிமுகவா?

இதற்கிடையில் கூட்டணிக்காக அதிமுக, திமுக இரு கட்சிகளுடனும் தேமுதிக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. சமீபத்தில் கோவை ஈஷா மையத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியுடன் மஹாசிவராத்திரி நிகழ்வில் பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டார். இதையடுத்து பிரேமலதா விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கும் என்பது பேசுபொருள் ஆனது.

திமுகவுடன் கூட்டணியில் இணைந்த தேமுதிக

இந்நிலையில் இன்று காலை திமுக தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினைத் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சந்தித்து, திமுகவுடன் கூட்டணியில் இணைந்தார். அவரை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, அமைச்சர்கள் ஏ.வ. வேலு, சேகர் பாபு உள்ளிட்டோர் வரவேற்றனர். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது:-

திமுகவுடன் முதன்முறை கூட்டணி

“தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கப்போகிறது என்பது பத்திரிகையாளர்களின் தொடர் கேள்வியாக இருந்தது. அதற்கு விடையளிக்கும் வகையில் தேமுதிக திமுகவுடன் கூட்டணியில் இணைந்திருக்கிறது. இது எங்கள் நிர்வாகிகள், தொண்டர்களின் விருப்பம். விஜயகாந்த் இல்லாத நேரத்தில் இந்தக் கூட்டணியை அமைத்திருக்கிறோம். 2016-லேயே திமுகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு இருந்தது. ஆனால், பத்தாண்டுகளுக்குப் பின் தாமதமாக வந்து கூட்டணி அமைத்திருக்கிறோம். தேமுதிக எத்தனைத் தொகுதிகளில் போட்டியிடும், வேட்பாளர்கள் யார் யார் என்பது உள்ளிட்ட விவரங்கள் குழு அமைத்து முடிவு செய்யப்பட்ட பிறகு, கூட்டணியின் தலைவர் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பார். திமுகவுடன் தேமுதிமுக முதன்முறை கூட்டணி அமைத்துள்ளது. இதை தமிழ்நாட்டு மக்களும், தேமுதிக நிர்வாகிகளும் தொண்டர்களும் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர்” என்றார்.

முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்பு

இதையடுத்து தேமுதிக கூட்டணியில் இணைந்ததை வரவேற்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

“முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் மேல் மாறாத அன்பு கொண்டவரும், எனது அன்பு நண்பருமான ‘கேப்டன்’ விஜயகாந்த் அவர்கள் உருவாக்கிய தேசிய முற்போக்கு திராவிட கழகம், இன்று மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இணைந்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது! சகோதரர் கேப்டன் உருவாக்கிய இயக்கத்தைத் தற்போது திறமையாக வழிநடத்தி வரும் பொதுச்செயலாளர் அன்புச் சகோதரி திருமதி பிரேமலதா விஜயகாந்தையும், அக்கட்சியின் நிர்வாகிகளையும் வருக வருக என வரவேற்கிறேன். கருப்பு சிவப்பைக் கொடியில் தாங்கியிருக்கும் தங்களது நல்வரவு - நல்லுறவு தொடர்ந்து தமிழ்நாட்டின் உயர்வுக்குப் பங்களிக்கட்டும்! திராவிட மாடல் ஆட்சி தொடரவும், தமிழ்நாடு அனைத்து வகையிலும் முன்னேறவும் இணைந்து பயணிப்போம்” என்று குறிப்பிட்டுள்ளர்.

தேமுதிகவின் தேர்தல் பயணம்

  • விஜயகாந்தால் 2005-ல் தொடங்கப்பட்ட தேமுதிக, 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் 'முரசு' சின்னத்தில் தனித்துப் போட்டியிட்டது. அப்போது விஜயகாந்த் மட்டுமே விருத்தாச்சலம் தொகுதியில் வெற்றி பெற்றார்.

  • 2009 நாடாளுமன்றத் தேர்தலிலும் கூட்டணி இன்றி தனித்துப் போட்டியிட்ட தேமுதிக, அனைத்து தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவியது.

  • 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 41 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் 29 இடங்களில் வெற்றி பெற்று, விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவரானார்.

  • 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து தேர்தலை எதிர்கொண்ட தேமுதிக, போட்டியிட்ட 14 தொகுதிகளிலும் அதிமுகவிடம் தோல்வியைத் தழுவியது.

  • 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் மதிமுக தலைமையில், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்திருந்த மக்கள் நலக் கூட்டணியில் இணைந்தது. அப்போது விஜயகாந்த் முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார். அதில் 104 தொகுதிகளில் தேமுதிக போட்டியிட்ட நிலையில், அனைத்து இடங்களிலும் தோற்றது.

  • 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் இணைந்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் போட்டியிட்டு, அனைத்து இடங்களிலும் தோற்றது.

  • 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அமமுக, எஸ்டிபிஐ கட்சிகளுடன் இணைந்து தேர்தலைச் சந்தித்தது. 60 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், எந்தத் தொகுதியிலும் வெற்றிபெறவில்லை.

  • 2024 நாடாளுமன்றத் தேர்தலில் விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு அவரது மனைவி பிரமேலதா விஜயகாந்த் தலைமையில் அதிமுகவுடன் கூட்டணியில் இணைந்த தேமுதிக, போட்டியிட்ட ஐந்து தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவியது.

  • இதனையடுத்து 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு திமுக கூட்டணியில் இணைந்துள்ளது.

DMDK has joined the alliance with DMK as per the wishes of party executives and workers, said the party's general secretary Premallatha Vijayakant.