அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் (கோப்புப்படம்) 
தமிழ்நாடு

அதிமுகவுடன் கூட்டணி உறுதி: தேமுதிக பேச்சுவார்த்தைக் குழு

"தொகுதி எண்ணிக்கை குறித்து அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்படும்."

கிழக்கு நியூஸ்

மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைப்பது உறுதி என தேமுதிக பேச்சுவார்த்தைக் குழு தெரிவித்துள்ளது.

மக்களவைத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தேமுதிக சார்பில் துணைச் செயலாளர் எல்.கே. சுதீஷ், அவைத் தலைவர் இளங்கோவன், கொள்கை பரப்புச் செயலாளர் மோகன்ராஜ், துணைச் செயலாளர் பார்த்தசாரதி ஆகியோர் அடங்கிய பேச்சுவார்த்தைக் குழுவைக் கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து, சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கூட்டணி தொடர்பாக தேமுதிக பேச்சுவார்த்தைக் குழு (சுதீஷ் தவிர்த்து) அதிமுக பேச்சுவார்த்தைக் குழுவுடன் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையை நடத்தியது. இந்தப் பேச்சுவார்த்தையில் கூட்டணி இறுதியானதாக தேமுதிக பேச்சுவார்த்தைக் குழு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

செய்தியாளர்களைச் சந்தித்த தேமுதிக அவைத் தலைவர் இளங்கோவன் தெரிவித்ததாவது:

"இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தை தொடரும். இருவரும் பரஸ்பர கருத்துகளைப் பரிமாறிக்கொண்டோம். எதிர்காலத்தில் இதுவொரு வெற்றிக் கூட்டணியாக அமையும் என்று பரஸ்பரம் பேசிக்கொண்டோம். தொகுதி எண்ணிக்கை குறித்து அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்படும். விருப்பப் பட்டியலை அளிக்கும் நிலைக்குப் பேச்சுவார்த்தை வரவில்லை. பரஸ்பரம் பேசிக்கொண்டு கூட்டணியை உறுதியாக எடுப்போம் என்று முடிவெடுத்துள்ளோம்" என்றார்.