சென்னையில் இருந்து தென் மாவட்டங்கள் மற்றும் கோவைக்குத் தீபாவளி, ஆயுத பூஜை உள்ளிட்ட பண்டிகைகளை ஒட்டி இயக்கப்படும் சிறப்பு ரயில்களில் நாளை (செப். 17) முதல் முன்பதிவு செய்துகொள்ளலாம்.
தீபாவளி மற்றும் ஆயுத பூஜை பண்டிகைகளை முன்னிட்டு, சென்னையில் இருந்து நாகர்கோவில், போத்தனூர், தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. நாடு முழுவதும் 150 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. அதில் தமிழ்நாட்டில் 10-க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன.
அதன்படி, சென்னை செண்ட்ரலில் இருந்து கோவை போத்தனூருக்குச் செல்லும் சிறப்பு ரயில், செப்டம்பர் 25 - அக்டோபர் 23 வரை ஒவ்வொரு வியாழக்கிழமையும் இயக்கப்படும். மறுமார்க்கத்தில் செப்டம்பர் 26 முதல் அக்டோஅர் 24 வரை வெள்ளிக்கிழமைகளில் போத்தனூர் - சென்னை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
அதேபோல் நாகர்கோவில் - தாம்பரம் இடையே சிறப்பு ரயில், செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 26 வரை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் இயக்கப்படும். மறுமார்க்கத்தில், செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 27 வரை திங்கட்கிழமைகளில் தாம்பரம் - நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும்.
தூத்துக்குடி - எழும்பூர் இடையே செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 23 வரை அனைத்து திங்கட்கிழமைகளிலும் சிறப்பு ரயில் இயக்கப்படும். செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 28 வரை செவ்வாய்க்கிழமைகளில் நாகர்கோவிலில் இருந்து சேலம், காட்பாடி வழியாக சென்னை சென்ட்ரலுக்கு சிறப்பு ரயில் இயக்கம். மறுமார்க்கமாக, அக்டோபர் 1 முதல் அக்டோபர் 29 வரை புதன்கிழமைகளில் சென்ட்ரல்-நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும்.
இதனிடையே சிறப்பு ரயில்களின் முன்பதிவு நாளை (செப். 17) முதல் தொடங்குகிறது. இதில் ரயில்வே வலைத்தளத்தில் ஆதார் எண்ணை இணைத்துள்ள பயணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.