ANI
தமிழ்நாடு

தமிழ்நாட்டில் எப்போது பட்டாசு வெடிக்கலாம்?: அரசு அறிவிப்பு | Diwali |

"அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்கக்கூடிய சரவெடிகளைத் தவிர்க்க வேண்டும்."

கிழக்கு நியூஸ்

தமிழ்நாட்டில் காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும் இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்குத் தடை தோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த அக்டோபர் 23, 2018-ல் பிறப்பித்த உத்தரவில், சுற்றுச்சூழலுக்கு உகந்த மூலப் பொருள்களைப் பயன்படுத்தி பட்டாசுகளை உற்பத்தி செய்ய வேண்டும் எனவும் வருங்காலத்தில் பசுமைப் பட்டாசுகளை உற்பத்தி செய்து விற்பனை செய்ய வேண்டும் எனவும் நிபந்தனைகளை விதித்தது.

மேலும் உச்ச நீதிமன்றம் தனது ஆணையில் பட்டாசுகளை வெடிப்பதால் காற்றின் தரம் பாதிக்கப்படுவது குறித்து போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் திறந்தவெளியில் குறிப்பிடப்பட்ட பகுதிகளில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க மாநில அரசுகள் வலியுறுத்த வேண்டும் எனவு அறிவுறுத்தியுள்ளது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு 2018-ம் ஆண்டிலிருந்து தீபாவளிப் பண்டிகையன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும் இரவு 7 மணி முதல் 8 மணி வரையில் மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்து அனுமதி வழங்கியது.

இந்த ஆண்டும் தீபாவளிப் பண்டிகை நாளன்று, கடந்த ஆண்டைப்போலவே காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும் இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பாதுகாப்பான தீபாவளிக்குப் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டியவை

  • பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும் குறைந்த அளவில் காற்றுமாசுப்படுத்தும் தன்மையும் கொண்ட பசுமைப் பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும்.

  • மாவட்ட நிர்வாகம்/உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன், பொதுமக்கள் திறந்தவெளியில் ஒன்றுகூடி கூட்டாக பட்டாசுகளை வெடிப்பதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள நலச்சங்கங்கள் மூலம் முயற்சிக்க வேண்டும்.

தவிர்க்க வேண்டியவை

  1. அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்கக்கூடிய சரவெடிகளைத் தவிர்க்க வேண்டும்.

  2. மருத்துவமனை, வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்படைத் தவிர்க்க வேண்டும்.

  3. குடிசைப் பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

ஆகவே, பொதுமக்கள் சுற்றுச்சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களில் கூட்டாக வெடித்து இந்தத் தீபாவளியை மாசற்ற தீபாவளியாக மாற்றத் தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தால் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அனைவருக்கும் இதயங்கனிந்த மாசற்ற தீபாவளி நல்வாழ்த்துகள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுக்க அக்டோபர் 20 அன்று தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

Diwali | Diwali Crackers |