கோப்புப்படம் ANI
தமிழ்நாடு

தவெகவில் மாவட்டச் செயலாளர்கள் நியமனம்!

மாவட்டச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு விஜய்யின் உருவம் மற்றும் கட்சிக் கொடி பொறிக்கப்பட்ட வெள்ளிக்காசு வழங்கப்பட்டது.

ராம் அப்பண்ணசாமி

தவெகவில் மாவட்டச் செயலாளர்களை நியமித்து உத்தரவிட்டுள்ளார் அக்கட்சித் தலைவர் விஜய்.

சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்திற்கு இன்று (ஜன.24) நண்பகல் 12.45 மணி அளவில் வருகை தந்தார் விஜய். இதனைத் தொடர்ந்து மாவட்ட வாரியாக நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு நிர்வாகிகளுக்கு நியமன ஆணைகளை வழங்கியுள்ளார் விஜய்.

கட்சியின் நிர்வாக வசதியைக் கருத்தில் கொண்டு, கட்சிப் பணிகளை துரிதமாக மேற்கொள்ளும் விதமாக, கட்சி அமைப்பு சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய 120 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார் விஜய்.

அரியலூர், இராணிப்பேட்டை கிழக்கு, இராணிப்பேட்டை மேற்கு, ஈரோடு கிழக்கு, ஈரோடு மாநகர், ஈரோடு மேற்கு, கடலூர் வடக்கு, கடலூர் தெற்கு, கடலூர் கிழக்கு, கடலூர் மேற்கு, கரூர் கிழக்கு, கரூர் மேற்கு, கள்ளக்குறிச்சி கிழக்கு, கோவை மாநகர், கோவை தெற்கு, சேலம் மத்தி, தஞ்சாவூர் தெற்கு, தஞ்சாவூர் மத்தி, நாமக்கல் மேற்கு என மொத்தம் 19 மாவட்டங்களுக்கு கட்சி நிர்வாகிகளை விஜய் நியமித்துள்ளார்.

நிர்வாக ரீதியாக ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒரு மாவட்டச் செயலாளர், ஒரு மாவட்ட இணைச் செயலாளர், ஒரு பொருளாளர், இரு துணைச் செயலாளர்கள் மற்றும் 10 செயற்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் 4 செயற்குழு உறுப்பினர்கள் பொறுப்பு பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

புதிய நிர்வாகிகளுக்கு தவெகவைச் சேர்ந்த அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று நியமன அறிவிப்பில் கேட்டுக்கொண்டுள்ளார் விஜய். அத்துடன் மாவட்டச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு விஜய்யின் உருவம் மற்றும் கட்சிக் கொடி பொறிக்கப்பட்ட வெள்ளிக்காசு வழங்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.