மருத்துவக் கழிவுகள் - கோப்புப்படம் ANI
தமிழ்நாடு

பொது இடங்களில் மருத்துவக் கழிவுகளை கொட்டினால் குண்டர் சட்டம்: அரசிதழில் வெளியீடு! | Medical Waste

சம்மந்தப்பட்ட நபர்களின் சொத்துகளை பறிமுதல் செய்ய சட்டதிருத்தம் வழிவகை செய்கிறது.

ராம் அப்பண்ணசாமி

மருத்துவக் கழிவுகளை பொது இடங்களில் கொட்டும் நபர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிய வழிவகை செய்யும் மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்த நிலையில், தற்போது அந்த சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம், தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றது. மாநிலத்தின் நீர் நிலைகள், பொது இடங்களில் மருத்துவக் கழிவுகளை கொட்டப்பட்டால் சம்மந்தப்பட்ட நபர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும் வகையில், 1982 குண்டர்கள் தடுப்புச் சட்டத்தில் அப்போது சட்டதிருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த சட்டதிருத்தத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்த நிலையில், தற்போது அது அரசிதழில் வெளியிடப்பட்டு கடந்த ஜூலை 8 முதல் சட்டதிருத்தம் அமலுக்கு வந்ததாக கூறப்பட்டுள்ளது.

இதன்படி, தமிழகத்தில் பொது இடங்கள் மற்றும் நீர் நிலைகளில் முறையற்ற வகையில் மருத்துவக் கழிவுகளை குவித்தாலோ அல்லது அண்டை மாநிலங்களில் இருந்து அவற்றை கொண்டு வந்து தமிழகத்தில் கொட்டினாலோ சம்மந்தப்பட்ட நபர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படுவதோடு, அத்தகைய நபர்களின் சொத்துகளையும் பறிமுதல் செய்ய இந்த சட்ட திருத்தம் வழிவகை செய்கிறது.

கடந்த 2023-ல் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் கேரளத்தில் இருந்து லாரியில் கொண்டுவரப்பட்ட மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.

அப்போது, `மருத்துவக்கழிவுகளை கொட்டுபவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டதிருத்தம் கொண்டு வருவதற்கு இது சரியான நேரம்’ என்று நீதிபதி கே.கே. ராமகிருஷ்ணன் கருத்து தெரிவித்தார். இந்நிலையில் தற்போது இந்த சட்டதிருத்தம் அமலாகியுள்ளது.

கேரளத்தில் இருந்து எல்லை தாண்டி வந்து தமிழகத்தின் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் மருத்துவக் கழிவுகளை கோட்டுவது தொடர் கதையாக உள்ளது. சட்ட திருத்தம் தற்போது அமலுக்கு வந்ததால் இத்தகைய செயல்பாடுகள் வெகுவாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.