இயக்குநரும், எழுத்தாளருமான பாலமுரளிவர்மன் தொகுத்து, டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பித்த `தமிழ்த் தேசியம் ஏன்? ஏதற்கு? எப்படி?’ என்கிற நூலின் வெளியீட்டு விழா நேற்று (ஜன.4) காலை 11 மணி அளவில் 48-வது சென்னை புத்தகக் காட்சியின் வெளி அரங்கில் நடைபெற்றது.
இந்த விழாவில் பாலமுரளிவர்மன், டிஸ்கவரி புக் பேலஸ் உரிமையாளர் வேடியப்பன், பேராசிரியர் செந்தில்நாதன், எழுத்தாளர் ம.சோ. விக்டர், கவிஞர் தீபச் செல்வன், இயக்குநர் களஞ்சியம், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டார்.
இந்த விழாவில் சிறப்புரையாற்றிய சீமான் திராவிடத்தையும், தமிழ் தேசியத்தை ஒப்பிட்டு பேசியதுடன், ஆளுங்கட்சியையும் முன்னாள் முதல்வர் கருணாநிதியையும் விமர்சித்தார். அண்ணா பல்கலைக்கழக விவகாரம் குறித்தும், நாதக கொள்கைகள் குறித்தும் அவர் பேசினார். இந்த விழாவில் புதுச்சேரியின் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது.
ஏனவே, தமிழ்நாட்டின் தமிழ்த்தாய் வாழ்த்தை இந்த விழாவில் புறக்கணித்துவிட்டதாகவும், புத்தகக் காட்சி மேடையை அரசியல் மேடையாக சீமான் பயன்படுத்திவிட்டதாகவும் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து டிஸ்கவரி புக் பேலஸ் உரிமையாளர் வேடியப்பன் வெளியிட்டுள்ள விளக்கம் பின்வருமாறு,
`நூலாசிரியரின் பரிந்துரையின் பேரில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானை பதிப்பாளர் என்ற முறையில் அழைத்து, நூல் வெளியீட்டு விழாவிற்கான அரங்கு அமைத்துக் கொடுத்தோம். அரசியல் தாக்குதல் மற்றும் அரசுக்கு எதிரான கருத்துகளைப் பேசக்கூடாது என்ற அறிவுறுத்தலுடன் பபாசி அமைப்பு இதற்கான அனுமதியை வழங்கியது. சீமானிடமும் இதே கருத்து வலியுறுத்தப்பட்டது.
சீமானின் விருப்பத்தின் பெயரில் பாரதிதாசனின் பாடலான, `வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே’ என்ற பாடல் ஒலிபரப்பப்பட்டது. அது புதுச்சேரியின் தமிழ்த்தாய் வாழ்த்து என்பதையோ, அதன்மூலம் தமிழ்நாட்டின் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்படுகிறது என்ற அரசியல் தெளிவோ இல்லாததற்கு எனது அறியாமையே காரணம். அதற்காக வருந்துகிறேன்.
நல்லதொரு இலக்கிய மேடையை அரசியல் மேடையாக நினைத்து சீமான் பேசிய கருத்துகளில் எனக்கோ, எங்கள் பபாசி அமைப்பிற்கோ உடன்பாடில்லை. இதை நாங்கள் ஆதரிக்கவில்லை. இதை ஒரு பாடமாக எடுத்துக்கொள்கிறோம். எதிர்பாராமல் நடந்த சம்பவத்திற்கு தகுந்த ஆலோசனை வழங்காமல், ஒட்டுமொத்தமாக எங்களின் இலக்கியச் செயல்பாடுகளை முடக்குவதற்குத் திட்டமிடுவது வருந்தத்தக்கது’ என்றார்.