ஜாஃபர் சாதிக் வழக்கில் இயக்குநர் அமீருக்கு சம்மன் 
தமிழ்நாடு

ஜாஃபர் சாதிக் வழக்கில் இயக்குநர் அமீருக்கு சம்மன்

ஏப்ரல் 2 அன்று தில்லி அலுவலகத்தில் ஆஜராகும்படி மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு சம்மன் அனுப்பியுள்ளது.

யோகேஷ் குமார்

ஜாஃபர் சாதிக் தொடர்புடைய போதைப் பொருள் கடத்தல் வழக்கில் இயக்குநர் அமீர் உட்பட 3 நபர்கள் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஜாஃபர் சாதிக் கடந்த மார்ச் 9-ல் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். ஜாஃபர் சாதிக் நடத்தி வந்த கும்பல் மூலம் கடந்த 3 ஆண்டுகளில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு 3,500 கிலோ சூடோபெட்ரைன் கடத்தப்பட்டதாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், ஜாஃபர் சாதிக்குக்குத் தமிழ்த் திரைத் துறை மற்றும் பாலிவுட்டில் தொடர்பு இருப்பதாகவும், போதைப் பொருள் தடுப்புப் பிரிவு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ஜாஃபர் சாதிக் தொடர்புடைய போதைப் பொருள் கடத்தல் வழக்கில் இயக்குநர் அமீர் உட்பட மூன்று நபர்கள், ஏப்ரல் 2 அன்று தில்லி அலுவலகத்தில் ஆஜராகும்படி மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு சம்மன் அனுப்பியுள்ளது.