சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குள் உள்ள கொடிமரத்தை மாற்றுவது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் அக்கோயில் தீட்சிதர்கள்.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோயிலுக்குள், தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோயில் அமைந்துள்ளது. நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் குழுவின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், கோவிந்தராஜ பெருமாள் கோயில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தக் கோயிலில் கடந்த 400 வருடங்களாக எந்தவித உற்சவமும் நடைபெறாமல் இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் அது தொடர்பான வழக்கு ஒன்று நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் கோவிந்தராஜ பெருமாள் கோயில் சந்நிதிக்கு எதிரே உள்ள கொடிமரத்தை அகற்றி அங்கே புதிய கொடிமரத்தை நிறுவ நேற்று (நவ.3) மாலை அங்கே அறநிலையத்துறை அதிகாரிகள் சென்றுள்ளனர்.
அப்போது அங்கே வந்த பொது தீட்சிதர்கள் குழுவினர் கொடிமரத்தை அகற்றக்கூடாது என அறநிலையத்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் கொடிமரத்தை மாற்றும் முயற்சியை அறநிலையத்துறையினர் கைவிட்டனர். இதை அடுத்து கொடிமரத்தை மாற்ற இன்று காலை மீண்டும் அறநிலையத்துறை அதிகாரிகள் நடராஜர் கோயிலுக்குச் சென்றனர்.
ஏற்கனவே அங்கே இருந்த கொடிமரத்தைப் போலவே புதிய கொடிமரம் இருந்தால் அதை நாங்கள் எதிர்க்கமாட்டோம், ஆனால் கொடி ஏற்றுவதற்கான வளையங்களோ, கூடுதல் பணிகளோ புதிய கொடிமரத்தில் இருந்தால் அதை நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம் என பொது தீட்சிதர்கள் குழுவினர் அறநிலையத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து காவல்துறையினரும், அறநிலையத்துறை அதிகாரிகளும், தீட்சிதர்கள் மற்றும் கோவிந்தராஜ பெருமாள் கோயில் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் வருவாய் கோட்டாட்சியர் முன்னிலையில் அறநிலையத்துறை அதிகாரிகள் உத்தரவாதம் அளித்தால் மட்டுமே ஏற்றுக்கொள்வோம் என பொது தீட்சிதர்கள் குழுவினர் தெரிவித்தனர். எனவே பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.