திருப்போரூர் கந்தசாமி கோயில் உண்டியலில் விழுந்த ஐஃபோன் விவகாரத்தை முன்வைத்து, ஒருவேளை ஐஃபோனில் பேச இறைவன் முருகன் ஆசைப்பட்டாரோ என்னவோ எனப் பேட்டியளித்துள்ளார் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்.
சென்னையை அடுத்த திருப்போரூர் கந்தசாமி கோயிலுக்குச் சாமி தரிசனம் செய்ய கடந்த அக்.18 அன்று சென்றுள்ளார் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தில் பணியாற்றி வரும அம்பத்தூரைச் சேர்ந்த தினேஷ். அப்போது, அவர் காணிக்கை செலுத்தியபோது, தவறுதலாக ரூ. 1 லட்சம் மதிப்புடைய அவரது ஐஃபோன் உண்டியலுக்குள் விழுந்துள்ளது.
ஆனால் உண்டியலுக்குள் விழுந்த ஐஃபோன் கோயிலுக்கே சொந்தம் அதைத் திருப்பிக் கொடுக்கமுடியாது, வேண்டுமானால் ஐஃபோனிலுள்ள தரவுகளை எடுத்துக்கொள்ளலாம் என கோயில் அலுவலர்கள் தினேஷிடன் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து தன் ஐஃபோனை திருப்பிக் கொடுக்குமாறு இந்து சமய அறநிலையத்துறையில் தினேஷ் மனு அளித்துள்ளார்.
உரிய விசாரணைக்குப் பிறகு இந்த விவகாரத்தில் முடிவெடுக்கப்படும் என அதிகாரிகள் அவரிடம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இன்று (டிச.22) செய்தியாளர்களை சந்தித்துப் பேட்டியளித்த நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இது தொடர்பாக பேசியவை பின்வருமாறு,
`இதை நினைத்து சிரிப்பதாக அழுவதா என்று தெரியவில்லை. ஒரு வேளை இறைவன் முருகன் யாரிடமாவது ஐஃபோனில் பேச ஆசைப்பட்டாரோ என்னவோ. காணிக்கையை செலுத்தியவர் தன் இடது கையில் அலைபேசியை வைத்திருக்காலம். சரி (உண்டியலில்) போட்டுவிட்டார். அது அவரது அலைபேசிதானா என்பதை உறுதி செய்துவிட்டுக் கொடுத்திருக்கலாம்.
அது என்ன அதற்கு ஒரு முறை இருக்கிறது? ஐஃபோனை வைத்து என்ன செய்யப்போகிறார்கள்? அதை விற்று பணத்தை உண்டியலில் போடுவார்களா? படத்தைப் பார்த்து கெட்டுப்போய்விட்டனர். சரி ஒரு வேளை அதற்குள் குண்டு ஒன்றை போட்டுவிட்டார் என வைத்துக்கொள்வோம். (அப்போது) குண்டு எங்களுக்குத்தான் எனக் கூறுவார்களா? காலக் கொடுமையே’ என்றார்.