கோப்புப்படம் 
தமிழ்நாடு

தேசியக் கல்விக் கொள்கை: முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் கேள்வி

"தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் தேர்வுகளை நடத்த எதிர்க்கிறீர்களா?"

கிழக்கு நியூஸ்

தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலினின் எக்ஸ் தளப் பதிவைக் குறிப்பிட்டு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கேள்வியெழுப்பியுள்ளார்.

"ஜனநாயகத்தில் மாநிலங்களுக்கிடையே ஆரோக்கியமான போட்டி நிலவுவது எப்போதும் வரவேற்கக்கூடியது தான். எனினும், ஒரு விஷயத்தை நிறுவுவதற்காக மற்ற மாநிலங்களை ஒன்றுக்கொன்று எதிராக நிறுத்துவது அரசியலமைப்பின் மாண்புக்கு எதிரானது. நாட்டு மக்களிடமிருந்து பரவலாக ஆலோசனைகள் பெறப்பட்ட பிறகே தேசியக் கல்விக் கொள்கை 2020 வகுக்கப்பட்டது.

தேசியக் கல்விக் கொள்கைக்கு எதிரான உங்களுடைய கொள்கை ரீதியிலான எதிர்ப்பில் சில கேள்விகளை எழுப்ப விரும்புகிறேன்.

  • தமிழ் உள்ளிட்ட தாய்மொழி வழிக் கல்வியை எதிர்க்கிறீர்களா?

  • தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் தேர்வுகளை நடத்த எதிர்க்கிறீர்களா?

  • தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் பாடப்புத்தகங்கள் மற்றும் பாடங்கள் தயாராவதை எதிர்க்கிறீர்களா?

  • முழுமையான, சமநிலையான, எதிர்காலத்துக்கேற்ப, அனைத்தையும் உள்ளடக்கிய கட்டமைப்புகளைக் கொண்ட தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறீர்களா?

இல்லையெனில், அரசியல் ஆதாயங்களுக்கு அப்பாற்பட்டு தமிழ்நாட்டு மாணவர்களின் நலனுக்கு முன்னுரிமை கொடுத்து தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன்" என்று தர்மேந்திர பிரதான் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக நாளிதழில் வெளியான செய்தியைப் பகிர்ந்து, தேசிய கல்விக் கொள்கையில் இணைய மறுப்பதால் சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்க மறுப்பதை முதல்வர் ஸ்டாலின் விமர்சித்திருந்தார். மேலும், இலக்குகளைப் பூர்த்தி செய்யாத மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதைக் கேள்விக்குள்ளாக்கிய முதல்வர் ஸ்டாலின், இதுதான் தரமான கல்வியைக் கொண்டு சேர்ப்பதற்கான மத்திய பாஜக அரசின் திட்டமா என்றும் குறிப்பிட்டிருந்தார்.