`இந்து சமய அறநிலையத்துறையில் திமுக அரசு மேற்கொண்டுவரும் சாதனையை பார்த்து உண்மையான பக்தர்கள் பாராட்டி வருகின்றனர், பக்தியை பகல்வேஷ அரசியலுக்குப் பயன்படுத்துபவர்களால் இதை தாங்கிக்கொள்ள முடியவில்லை’ என பேசியுள்ளார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.
இன்று (அக்.21) காலை, சென்னை திருவான்மியூரில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 31 இணையர்களுக்கு திருமண விழாவை நடத்தி வைத்தார் முதல்வர் ஸ்டாலின். இந்த நிகழ்வில் அவர் பேசியவை பின்வருமாறு:
`நான் முதல்வராக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு அறநிலையத்துறை சார்ந்த நிகழ்ச்சிகளில்தான் அதிகமாகக் கலந்துகொண்டிருக்கிறேன். 31 இணையர்களுக்கு திருமணம் நடத்திவைக்கும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்துவதற்கு மகிழ்ச்சியடைகிறேன்.
திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு கோயில்களைப் பழமை மாறாமல் புதுப்பிப்பதற்கு ஒரு வல்லுனர் குழுவை அமைத்தோம். அவர்களின் ஆலோசனையின் பெயரில் தொடர்ந்து பணிகளை மேற்கொண்டு வருகிறோம். கடந்த 3 ஆண்டுகளில் 2,226 கோயில்களில் திருப்பணிகள் நிறைவுபெற்று சிறப்பான முறையில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது.
அதேபோல 10,238 கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் ரூ. 6,792 கோடி மதிப்பிலான 7,069 ஏக்கர் கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த சாதனையை பார்த்து உண்மையான பக்தர்கள் நமது அரசை மகிழ்ச்சியுடன் பாராட்டி வருகின்றனர். பக்தியை தங்களது பகல்வேஷ அரசியலுக்குப் பயன்படுத்துபவர்களால் இதை தாங்கிக்கொள்ள முடியவில்லை.
தலைவர் கலைஞர் பராசக்தி திரைப்படத்தில் ஒரு வசனத்தை வைத்திருப்பார். கோயில்கள் கூடாது என்பது நமது கொள்கை அல்ல, கோயில்கள் கொடியவர்களின் கூடாரம் ஆகிவிடக்கூடாது என்பதுதான் நம் லட்சியம் என்றார். அத்தனை மதங்களையும் சமமாக மதித்து எல்லோருடைய உரிமைகளையும் காக்கும் அரசாக இது இருக்கிறது’ என்றார்