படம்: https://x.com/DevanathayadavT
தமிழ்நாடு

நிதி நிறுவன மோசடி: பாஜக கூட்டணியில் போட்டியிட்ட தேவநாதன் கைது

இவருடையக் கைது நடவடிக்கைக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

கிழக்கு நியூஸ்

நிதி நிறுவன மோசடி வழக்கில் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத் தலைவர் தேவநாதன் கைது செய்யப்பட்டுள்ளார்.

தேவநாதன் சென்னை மயிலாப்பூரில் சாசுவதா நிதி நிறுவனத்தின் தலைவராக உள்ளார். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்த இவர், சிவகங்கை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

இவருடைய நிதி நிறுவனத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் நிரந்தர வைப்பு நிதி வைத்துள்ளார்கள். இந்த நிதி நிறுவனத்தில் ரூ. 50 கோடிக்கும் மேல் மோசடி செய்யப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

140-க்கும் மேற்பட்டோர் புகாரளித்ததன் பேரில் தேவநாதன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் புதுக்கோட்டையில் வைத்து தேவநாதனைக் கைது செய்துள்ளார்கள்.

இவருடையக் கைது நடவடிக்கைக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:

"இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம் நிறுவனத் தலைவர், தேவநாதன், தமிழகக் காவல்துறையால் கைது செய்யப்பட்டிருக்கும் செய்தி அறிந்தேன். மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி நிறுவனத்தில், முதலீடு செய்துள்ளவர்கள் அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதில் தமிழக பாஜக உறுதியாக உள்ளது.

தமிழக அரசு முழுமையான விசாரணை நடத்தி, முதலீட்டாளர்கள் அனைவருக்கும் இதனை உறுதி செய்ய வேண்டும். அதே நேரத்தில், திமுக அரசின் சட்டம் ஒழுங்கு மற்றும் நிர்வாகத் தோல்வியைச் சுட்டிக் காட்டும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளை அச்சுறுத்தும் முயற்சிகளில் இதுவும் ஒன்று என்றால், அதனை வன்மையாகக் கண்டிக்கிறேன்" என்றார் அவர்.