தமிழ்நாடு

மீண்டும் தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை?: துணை முதல்வர் விளக்கம்

"தமிழ்த்தாய் வாழ்த்து தவறாகப் பாடப்படவில்லை.."

கிழக்கு நியூஸ்

அரசு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாகப் பாடப்படவில்லை என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.

முதல்வரின் புத்தாய்வுத் திட்டம் - 2022-24-ன் கீழ் பயிற்சி பெற்றவர்களுக்கு நிறைவுச் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை நடைபெற்றது. இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பயிற்சி பெற்றவர்களுக்கு நிறைவுச் சான்றிதழ் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சி தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுடன் தொடங்கியது. தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலின்போது, ஏதோ சிக்கல் இருந்ததாகத் தெரிகிறது. பாடல் பாடியவர்களின் குரல் சரியாகக் கேட்காமல் இருந்தது. குறிப்பாக "திராவிட நல் திருநாடும்" என்ற வரி வரும்போது குரல் சரியாகக் கேட்கவில்லை. தமிழ்த்தாய் வாழ்த்து தவறாகப் பாடப்பட்டதாகத் தகவல் வெளியானது.

இதைத் தொடர்ந்து, நிகழ்ச்சி நிறைவுபெற்றவுடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்தார்.

"தமிழ்த்தாய் வாழ்த்து தவறாகப் பாடப்படவில்லை. தொழில்நுட்பக் கோளாறுதான். ஒலி வாங்கி சரியாக வேலைச் செய்யவில்லை. இரண்டு, மூன்று இடங்களில் அவர்கள் பாடல் பாடும்போது குரல் கேட்கவில்லை.

எனவே, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை மீண்டும் முதலிலிருந்து சரியாகப் பாடியுள்ளோம். இதன்பிறகு தேசிய கீதமும் சரியாகப் பாடப்பட்டது. தேவையில்லாமல் மீண்டும் எதுவும் பிரச்னையைக் கிளப்பிவிடாதீர்கள்" என்றார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.