தமிழ்நாடு

துறைச் செயலாளர்களின் வேலை அரசியல் செய்வது அல்ல: எடப்பாடி பழனிசாமி காட்டம் | Edappadi Palaniswami |

"மக்கள் வரிப் பணத்திலிருந்து தான் ஊதியம் கொடுக்கப்படுகிறது. அதிகாரிகள் நடுநிலையோடு நடந்துகொள்ள வேண்டும்."

கிழக்கு நியூஸ்

கரூர் உயிரிழப்பு சம்பவத்தில் துறைச் செயலாளர்களை வைத்து அரசியல் செய்யக் கூடாது என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஜூலை 7 முதல் மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

ஐந்தாம் கட்ட சுற்றுப்பயணத் திட்டத்தில் செப்டம்பர் 29, செப்டம்பர் 30 மற்றும் அக்டோபர் 4 அன்று தருமபுரி, நாமக்கல் மாவட்டங்களில் மேற்கொள்ளவிருந்த சுற்றுப் பயணத் திட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இவை மாற்றியமைக்கப்பட்டு தருமபுரியில் அக்டோபர் 2, 3 ஆகிய தேதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார் எடப்பாடி பழனிசாமி. அக்டோபர் 6 அன்று நாமக்கலில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

தருமபுரி, பாபிரெட்டிபட்டி, அரூர் ஆகிய தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று (அக்டோபர் 2) பிரசாரம் மேற்கொள்கிறார். அக்டோபர் 3 அன்று தருமபுரியில் பாலக்கோடு, பென்னாகரத்தில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

தருமபுரியில் இன்று (அக்டோபர் 2) பிரசாரம் மேற்கொண்டபோது, எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

"கரூரில் நிகழ்ந்த சம்பவம் குறித்து எல்லோரும் பார்த்திருப்பீர்கள். ஆளுங்கட்சிக்கு ஒரு நீதி, எதிர்க்கட்சிக்கு ஒரு நீதி என்று இருப்பது சரியா? நாட்டு மக்களைக் காக்கும் பொறுப்பிலிருப்பது அரசாங்கம் தான். பொதுக்கூட்டம், பேரணி, ஆர்ப்பாட்டம் என எல்லாவற்றுக்கும் பாதுகாப்பு கொடுப்பது அரசின் கடமை. காவல் துறைக்கு சரியான முறையில் முதல்வர் உத்தரவிட்டிருந்தால், காவல் துறை சரியான முறையில் செயல்பட்டிருந்தால், முறையாகப் பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்தால் 41 பேரை நாம் இழந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.

கரூரில் நிகழ்ந்த சம்பவத்தை எப்படி ஒரு துறைச் செயலாளர் சொல்ல முடியும். இது அவமதிப்பு. ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுவிட்டது. துறைச் செயலாளர்களை வைத்து அரசியல் செய்ய வேண்டாம். துறைச் செயலாளர்களின் வேலை அரசியல் செய்வது அல்ல. உங்களுடைய துறைகளிலுள்ள வேலைகளைச் செய்வது தான் உங்களுடைய வேலை.

இதற்குப் பதிலாக இவர் ஏறினார், இவர் சென்றார், இவர் கையைக் காட்டவில்லை என்பதெல்லாம் உங்களுடைய (துறைச் செயலாளர்கள்) சொல்லாக இருக்கக் கூடாது. அதிமுக ஆட்சிக்கு வந்தபிறகு, இவற்றையெல்லாம் தோண்டி எடுத்து தவறானச் செயல்களில் ஈடுபடும் அதிகாரிகளை விடமாட்டேன். ஒவ்வொருவருடைய வரிப் பணத்திலிருந்து தான் உங்களுக்கு ஊதியம் கொடுக்கப்படுகிறது. அதிகாரிகள் நடுநிலையோடு நடந்துகொள்ள வேண்டும். மக்கள் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். மிகப் பெரிய சோகம், துயரச் சம்பவத்தை நியாயப்படுத்தி பேசுவது எந்த விதத்தில் சரி? அரசியல்வாதி பேசலாம், ஆனால் ஓர் அரசு அதிகாரி பேசலாமா? அரசு அதிகாரிகள் நடுநிலையோடு இருந்து தங்களுடைய பணியைச் செயல்படுத்த வேண்டும். இதைத்தான் நாட்டு மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இந்த ஆட்சியில் அதைப் பார்க்க முடியாது.

கரூர் நிகழ்வு நடந்துவிட்டது. முதல்வர் இரவோடு இரவாகச் சென்று ஆறுதல் சொன்னார். துணை முதல்வர் ஒருவர் இருக்கிறார். உல்லாசமாக வெளிநாடு சென்றுவிட்டார். இங்கு பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. நாட்டு மக்கள் பதறி துடித்துக்கொண்டிருக்கிறார்கள். உடனடியாக தனி விமானத்தைப் பிடித்து திருச்சி வருகிறார். அங்கிருந்து கரூர் சென்றார், பார்த்தார், மீண்டும் விமானத்தில் ஏறி புறப்பட்டுச் சென்றுவிட்டார். இவரெல்லாம் நாட்டை ஆட்சி செய்தால் நாடு உருப்படியாக இருக்குமா? மக்கள் உயிரிழந்து துடித்துக்கொண்டிருக்கும்போது கூட இவர்களுக்கு இரக்கம் இல்லை. இவர்களுக்கு உல்லாச சுற்றுப்பயணம் தான் முக்கியம். நாட்டு மக்கள் முக்கியம் இல்லை" என்றார் எடப்பாடி பழனிசாமி.

Edappadi Palaniswami | Department Secretaries | IAS Officers | Karur | Karur Stampede | ADMK | AIADMK | TVK | TVK Vijay |