கோப்புப்படம் ANI
தமிழ்நாடு

தில்லி தேர்தல் ஒரு படிப்பினை: இண்டியா கூட்டணிக்கு திருமாவளவன் அறிவுரை

காலை 11.40 மணி நிலவரப்படி பாஜக 46 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி 24 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.

கிழக்கு நியூஸ்

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி பின்னடைவைச் சந்தித்திருப்பது அதிர்ச்சியளிப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தில்லியில் மொத்தமுள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த வியாழக்கிழமை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இண்டியா கூட்டணியில் அங்கமாக உள்ள காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டன. தில்லியில் பாஜக, ஆம் ஆத்மி, காங்கிரஸ் இடையே மும்முனைப் போட்டி நிலவியது.

இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. காலை 11.40 மணி நிலவரப்படி பாஜக 46 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி 24 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. காங்கிரஸ் எந்த இடத்திலும் முன்னிலை வகிக்கவில்லை. பெரும்பான்மைக்கு 36 இடங்கள் தேவை என்ற நிலையில், பாஜக கூடுதலாக 10 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி பின்னடைவைச் சந்தித்திருப்பது அதிர்ச்சியளிப்பதாகவும், இதைப் படிப்பினையாக எடுத்துக்கொள்ள வேண்டும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:

"தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக முன்னிலையில் இருப்பது மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது. ஆம் ஆத்மி இந்தளவுக்குப் பின்னடைவைச் சந்திக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. தில்லியில் பாஜக ஆட்சி அமையும் பட்சத்தில், அது தேசத்துக்கான ஒரு பின்னடைவாகக் கருத வேண்டியிருக்கிறது. நியாயமான முறையில் இந்தத் தேர்தல் நடைபெற்றிருக்குமா என்கிற ஐயத்தை எழுப்புகிறது.

இண்டியா கூட்டணி கட்டுக்கோப்பாக இல்லை. காங்கிரஸ், ஆம் ஆத்மி ஒற்றுமையாக இந்தத் தேர்தலைச் சந்திக்கவில்லை. இண்டியா கூட்டணித் தலைவர்கள் இதுகுறித்து தீவிரமாகக் கலந்தாய்வு செய்ய வேண்டும். இண்டியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் ஈகோ பிரச்னைகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, நாட்டையும் மக்களையும் காப்பாற்றுவதற்கான திசைவழியில் சிந்திக்க வேண்டும்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு மட்டுமல்ல, சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் இண்டியா கூட்டணி ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய தேவை உள்ளது. ஆகவே, தில்லி தேர்தல் முடிவுகளை ஒரு படிப்பினையாகக் கொண்டு காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி மற்றும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி ஆகியவை இதுகுறித்து தீவிரமாக சிந்திக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் நாம் எதிர்பார்த்தவாறு, திமுக மிக அதிகமான வாக்குகள் முன்னிலையில் உள்ளது. எதிர்பார்த்த வெற்றியை திமுக கூட்டணி, திமுக பெறும் என நம்புகிறேன்" என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.