போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திமுகவின் முன்னாள் பிரமுகர் ஜாஃபர் சாதிக்குக்கு தில்லி நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு போதைப் பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப் பொருளைக் கடத்தியதாக எழுந்த குற்றச்சாட்டில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரால் கடந்த மார்ச் 9-ல் கைது செய்யப்பட்டார் ஜாஃபர் சாதிக். இதைத் தொடர்ந்து, கடந்த 26-ல் அமலாக்கத் துறையால் ஜாஃபர் சாதிக் கைது செய்யப்பட்டார். திஹார் சிறையிலுள்ள ஜாஃபர் சாதிக்கிடம் விசாரணை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து, அமலாக்கத் துறை அவரிடம் விசாரணை நடத்தியது.
இந்த நிலையில், ஜாஃபர் சாதிக்குக்கு தில்லி நீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் வெளிநாடுகளுக்குச் செல்லக் கூடாது, கடவுச் சீட்டைச் சமர்ப்பிக்க வேண்டும், கடவுச் சீட்டு இல்லாதபட்சத்தில் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
எனினும், அமலாக்கத் துறையின் பணமோசடி வழக்கிலும் கைது செய்யப்பட்டுள்ளதால், இவர் அமலாக்கத் துறை காவலில் இருக்கவுள்ளார்.