கீழடி அகழாய்வு குறித்து அமர்நாத் ராமகிருஷ்ணா சமர்ப்பித்துள்ள அறிக்கையில் குறைபாடுகள் இருப்பதாக மத்திய கலாசாரத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் 2015-16-ம் ஆண்டுகளில் இந்தியத் தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. அமர்நாத் ராமகிருஷ்ணா தலைமையில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் 5,200 தொல்லியல் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றில் பல பொருள்களின் தொன்மை கரிமப் பகுப்பாய்வு மூலம் உறுதிப்படுத்தப்பட்டன.
முதலிரண்டு கட்ட அகழாய்வைத் தொடர்ந்து, அமர்நாத் ராமகிருஷ்ணா பணியிடமாற்றம் செய்யப்பட்டார். பிறகு, தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முதலிரு கட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வு குறித்து 982 பக்கங்கள் கொண்ட அறிக்கையை அமர்நாத் ராமகிருஷ்ணா மத்திய அரசிடம் சமர்ப்பித்தார். ஆனால், மத்திய அரசு சார்பில் இந்த அறிக்கை இன்னும் வெளியிடப்படாமல் உள்ளது. அறிக்கையில் திருத்தம் செய்து சமர்ப்பிக்க வேண்டும் என அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு மத்திய அரசு சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது. இந்தப் பிரச்னை தமிழ்நாட்டில் பெரும் அரசியல் பிரச்னையாக அவ்வப்போது வெடித்து வருகிறது. கீழடி அகழாய்வு அறிக்கையில் மாற்றங்களைச் செய்ய முடியாது என அமர்நாத் ராமகிருஷ்ணாவும் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார்.
இந்நிலையில், மக்களவை உறுப்பினர்கள் கனிமொழி மற்றும் வெங்கடேசன் ஆகியோர் கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிடுவது குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்பினார்கள். இதற்கு மத்திய கலாசாரத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் எழுத்துபூர்வமாகப் பதிலளித்துள்ளார்.
"கீழடியில் 2014-15 மற்றும் 2015-16 பருவங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வின் அறிக்கை ஜனவரி 2023-ல் இந்தியத் தொல்லியல் துறையால் பெறப்பட்டது. நிலையான வழிமுறைகளின்படி, அந்த அறிக்கை வல்லுநர்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இந்தச் செயல்முறை அவசியமானது. கீழடி அகழாய்வு அறிக்கையை தாமதப்படுத்தும் நோக்கம் இல்லை. அகழாய்வு கண்டுபிடிப்புகளின் முக்கியத்துவத்தைக் குறைக்கும் நோக்கமும் இல்லை.
முதலிரு கட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வு அறிக்கை வல்லுநர்கள் குழுவால் ஆய்வு செய்யப்பட்டது. காலவரிசை, பகுப்பாய்வு உள்ளிட்டவற்றில் குறைபாடுகள் இருப்பதாக அகழ்வாராய்ச்சியாளரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கீழடியில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்ட இடத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து 2014 முதல் 2017 வரை இந்தியத் தொல்லியல் துறையால் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. 2018 முதல் தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. எனினும், மாநில அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வின் இறுதி அறிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை" என்று மத்திய கலாசாரத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தனது பதிலில் குறிப்பிட்டுள்ளார்.
கீழடி அகழாய்வு அறிக்கை குறித்து கனிமொழி எழுப்பிய கேள்விகள்:
தமிழ்நாட்டில் உள்ள கீழடி தொல்லியல் தளத்தின் அகழ்வாராய்ச்சி அறிக்கையை வெளியிடுவதில் ஏற்பட்டிருக்கும் தாமதத்திற்கான காரணங்கள் என்ன?
ஜனவரி 2023 இல் தயாரிக்கப்பட்டு இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்திற்கு (ASI) சமர்ப்பிக்கப்பட்ட கீழடி வரைவு அகழ்வாராய்ச்சி அறிக்கையை அரசாங்கம் பெற்றதா? அதை ஏற்றுக்கொண்டதா? அப்படியானால், அதன் விவரங்கள் என்ன? இல்லையென்றால், அதற்கான காரணங்கள் என்ன?
இந்த வரைவு அறிக்கை மீது ஒன்றிய அரசாங்கத்தால் அல்லது இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்தால் அதிகாரப்பூர்வமாக ஆட்சேபனைகள் ஏதும் எழுப்பப்பட்டதா?
கீழடி அகழ்வாராய்ச்சி பற்றி தாக்கல் செய்யப்பட்ட அசல் அறிக்கையை மதிப்பாய்வு செய்ய அல்லது மாற்றியமைப்பதற்காக தற்போது ஒப்படைக்கப்பட்டுள்ள அதிகாரி அல்லது அதிகாரிகள் பற்றிய விவரங்கள் என்ன?
கீழடி குறித்த இறுதி அறிக்கையை பொதுவில் வெளியிடுவதற்கும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்கும் அரசு ஏதும் காலக்கெடு வைத்துள்ளதா?
கிமு 580 க்கு முந்தைய மிகவும் மேம்பட்ட நாகரிகத்தை சுட்டிக்காட்டும் பல அகழ்வாராய்ச்சி தளங்கள் மற்றும் கண்டுபிடிப்புகள் இருக்கும் நிலையில், கீழடியை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இடமாக அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளதா? அப்படியானால், அதன் விவரங்கள் என்ன? இல்லையென்றால், அதற்கான காரணங்கள் என்ன?
Keezhadi Excavation | Amarnath Ramakrishna | Keezhadi | Keeladi | Keezhadi Excavation Report | Keeladi Excavation Report | Gajendra Singh Shekhawat | Kanimozhi | Su. Venkatesan