அண்ணாமலை
அண்ணாமலை ANI
தமிழ்நாடு

பிரதமர் குறித்து அவதூறு பேச்சு: திமுக அமைச்சர் மீது பாஜக புகார்

யோகேஷ் குமார்

பிரதமர் குறித்து அவதூறாகப் பேசியதாக திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தமிழக பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள தண்டுபத்து கிராமத்தில் மார்ச் 22 அன்று திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து, இண்டியா கூட்டணி சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், பிரதமரை அவதூறாகப் பேசியதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவர் மீது உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி, தமிழக பாஜக சார்பில் தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக காவல்துறை டிஜிபியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:

“பிரதமர் மோடிக்கு எதிராக மரியாதை குறைவான கருத்துகளையும், மன்னிக்க முடியாத பேச்சுகளையும் வெளியிட்டு திமுக தலைவர்கள் தாழ்வான நிலையை அடைந்துள்ளனர்.

திமுக தலைவர்கள் விமர்சிக்க ஒன்றும் இல்லாத சமயத்தில் இப்படித்தான் நடந்துகொள்வார்கள். அந்த மேடையில் இருந்த திமுக எம்.பி. கனிமொழியும் இதனை தடுக்கவில்லை.

பிரதமர் குறித்து அவதூறாக பேசிய திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது கடுமையான மற்றும் உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி, தமிழக பாஜக சார்பில் தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக காவல்துறை டிஜிபியிடம் புகார் அளித்துள்ளோம்.

எனவே இது குறித்து விசாரணை நடத்தி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக தகுந்த நடவடிக்கையை எடுப்பார்கள் என்று நம்புகிறோம்” என்றார்.