ANI
தமிழ்நாடு

முறைகேடு புகார்: செந்தில் பாலாஜி மீது வழக்குப்பதிய ஒரு வாரத்தில் தமிழக அரசு முடிவு!

மனுதாரர் தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மனு மீதான விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

ராம் அப்பண்ணசாமி

தமிழகத்தில் டிரான்ஸ்ஃபார்மர்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் நடந்த முறைகேடு தொடர்பாக, முன்னாள் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிரான புகார் மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி வழங்குவது குறித்து ஒரு வாரத்தில் முடிவு செய்யப்படும் என்று, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதியளித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், `தமிழகத்தில் 2021-2023 காலகட்டத்தில், 45,800 டிரான்ஸ்ஃபார்மர்கள் கொள்முதல் செய்ய, ரூ. 1,182 கோடி மதிப்புக்கு ஒப்பந்தம் கோரப்பட்டது. ஒப்பந்த ஆவணங்களை ஆய்வு செய்ததில் ஒப்பந்ததாரர்கள் லாபமடையச் செய்ததன் மூலம் அரசுக்கு ரூ. 397 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறையிடம் அளிக்கப்பட்ட புகார் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடவேண்டும். இந்த முறைகேட்டில் முன்னாள் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிராக சந்தேகம் கொள்ள ஆதாரங்கள் உள்ளன. உயர் நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் சிறப்புப் புலனாய்வு குழு இந்த முறைகேடு குறித்து விசாரிக்க உத்தரவிடவேண்டும்’ என்று அறப்போர் இயக்கம் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனு மீதான விசாரணை, நீதிபதி வேல்முருகன் முன்பு இன்று (ஜூலை 3) நடைபெற்றது. தமிழக அரசு சார்பில், தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன் மற்றும் அறப்போர் இயக்கம் சார்பில் வழக்கறிஞர் சுரேஷ் ஆகியோர் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக வாதிட்ட தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன், `மனுதாரர் அளித்துள்ள புகார் மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி வழங்குவது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள், ஒரு வாரத்தில் முடிவெடுக்கவுள்ளனர்’ என்றார்.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சுரேஷ், ` அனைத்து ஆவணங்களும் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்டுள்ளன. புகாரளித்து இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. மனு மீது விரிவான வாதங்களை முன்வைக்க, விசாரணையை திங்கள்கிழமைக்கு (ஜூலை 7) ஒத்திவைக்கவேண்டும்’ என்றார்.

மனுதாரர் தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மனு மீதான விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.