தயாநிதி மாறன் ANI
தமிழ்நாடு

எடப்பாடி பழனிசாமி மீது தயாநிதி மாறன் அவதூறு வழக்கு

தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பழனிசாமி பேசியதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

யோகேஷ் குமார்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது திமுக எம்.பி தயாநிதி மாறன் எழும்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

நாளை முதல் ஜூன் 1 வரை இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டில் நாளை ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இந்நிலையில் தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பழனிசாமி பேசியதாக எடப்பாடி பழனிசாமி மீது திமுக எம்.பி தயாநிதி மாறன் குற்றம் சாட்டியுள்ளார்.

தயாநிதி மாறன் பேசியதாவது:

“தேர்தல் பிரசாரத்தின்போது எடப்பாடி பழனிசாமி உண்மைக்கு புறமாக, நான் தொகுதி மேம்பாட்டு நிதியை 75 சதவீதம் பயன்படுத்தவில்லை என தவறாகப் பேசியுள்ளார். இதை எதிர்த்து நான் அவருக்கு 24 மணி நேரத்திற்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பினேன். ஆனால் அதற்கு அவர் பதிலளிக்கவில்லை. எனவே அவர் மீது எழும்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்குப் பதிவு செய்துள்ளோம்.

இந்த வழக்கு அடுத்த மாதம் 14 அன்று விசாரணைக்கு வருகிறது. இதுவரை 95 சதவீதத்திற்கு மேல் நான் என் தொகுதி மேம்பாட்டு நிதியைப் பயன்படுத்தியுள்ளேன். ரூ. 17 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில் ரூ. 17 லட்சத்தைத் தவிர மொத்த தொகையையும் மத்திய சென்னை தொகுதிக்கு செலவிட்டேன். பழனிசாமி திமுகவை தாக்கவேண்டும் என்றே பேசுகிறார்” என்றார்.