குடும்பத்தினருடன் ஜியா குமாரி https://x.com/omjasvinMD
தமிழ்நாடு

10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் 93 மதிப்பெண்கள் எடுத்த பீஹார் தொழிலாளியின் மகள்!

நீங்கள் எங்கு இருக்கிறீர்களோ, அங்கு பேசப்படும் மொழியைக் கற்றுக்கொள்ளவேண்டும்.

ராம் அப்பண்ணசாமி

தமிழ்நாட்டில் நேற்று (மே 16) 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் புலம்பெயர்ந்த பீஹார் தொழிலாளி ஒருவரின் மகள் தேர்ச்சி பெற்றது மட்டுமல்லாமல், தமிழ் பாடத்தில் 93 மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளார்.

சென்னை விமான நிலையத்திற்கு அருகே உள்ள கவுல் பஜாரின் அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்துவந்த ஜியா குமாரி, நடந்து முடிந்த 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 500-க்கு 467 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார். ஆங்கிலத்திலும், சமூக அறிவியலிலும் தலா 99 மதிப்பெண்களும், தமிழ் பாடத்தில் 93 மதிப்பெண்களும் பெற்றுள்ளார்.

இது தொடர்பாகப் டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகத்திற்குப் பேட்டியளித்த ஜியா குமாரி, `என் தந்தை கட்டுமானத் தொழிலாளியாக 17 வருடங்களுக்கு முன்பு சென்னைக்கு வந்தார். தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகள் நன்றாக உள்ளதாக அவர் எங்களிடம் தெரிவித்தார். என் தாயார், சகோதரிகளுடன், நானும் சென்னைக்கு வந்தேன்’ என்றார்.

மேலும், `ஹிந்தியைவிட தமிழ் சிரமம்தான், ஆனால் புரிந்துகொள்ளத் தொடங்கிவிட்டால் அது மிகவும் எளிது. அனைவரும் இங்கே தமிழில்தான் உரையாடுகிறார்கள், எனவே நானும் அவர்களுடன் தமிழிலேயே உரையாடத் தொடங்கினேன். நீங்கள் எங்கு இருக்கிறீர்களோ, அங்கு பேசப்படும் மொழியைக் கற்றுக்கொள்ளவேண்டும். அப்போதுதான் அங்குள்ள சமூகத்துடன் இயல்பாகப் பழக முடியும்’ என்றார்.

பல்லாவரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு பயில ஜியா குமாரி திட்டமிட்டுள்ளார். அவரது தந்தை, மாதத்திற்கு ரூ. 10 ஆயிரம் வரையில் மட்டுமே சம்பாதிக்கிறார். அரசுப் பள்ளியில் வழங்கப்படும் இலவச கல்வியும், உணவுத் திட்டமும் தன் குடும்பத்திற்கு பெரிதும் உதவியாக உள்ளதாக அவர் தகவலளித்துள்ளார்.