தமிழ்நாடு

சிறுமி வன்கொடுமை வழக்கு: தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து | Daswant |

மேலும், வழக்கிலிருந்து தஷ்வந்தை விடுவிக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிழக்கு நியூஸ்

சிறுமியை வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் தஷ்வந்துக்குப் பிறப்பிக்கப்பட்ட மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

கடந்த 2017-ல் சென்னை போரூர் அருகே 6 வயது சிறுமியை வன்கொடுமை செய்து எரித்துக்கொன்றதாக தஷ்வந்த் என்ற இளைஞர் மீது குற்றம்சாட்டப்பட்டது. காவல் துறையினரால் தஷ்வந்த் கைது செய்யப்பட்டபோதும், 90 நாள்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. எனவே, ஜாமின் மூலம் அவர் வெளியே வந்தார்.

இதைத் தொடர்ந்து, அதே ஆண்டில் தனது தாயார் சரளாவை அடித்துக் கொலை செய்து 25 பவுன் தங்க நகைகளைப் பறித்துச் சென்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. மும்பை தப்பி சென்ற அவரை தமிழகக் காவல் துறையினர் மும்பை சென்று கைது செய்தார்கள்.

அவர் காவல் துறையினரிடமிருந்து தப்பி, மீண்டும் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், தாய் சரளாவைக் கொன்ற வழக்கில் அவருடைய தந்தை பிறழ்சாட்சியாக மாறியதையடுத்து, அந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

இதனிடையே, சிறுமியை வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில், விசாரணை நீதிமன்றமான செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் 2018-ல் தஷ்வந்துக்கு தூக்குத் தண்டனை விதித்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். சென்னை உயர் நீதிமன்றம் மகிளா நீதிமன்ற மரண தண்டனை உத்தரவை உறுதி செய்து, தஷ்வந்தின் மனுவைத் தள்ளுபடி செய்தது.

எனினும், கருணை அடிப்படையில் மரண தண்டனையை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் தஷ்வந்த். மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்றம், மரண தண்டனையை நிறுத்தி வைத்திருந்தது.

தற்போது, சிறுமியை வன்கொடுமை செய்த வழக்கில் தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. மேலும், வழக்கிலிருந்து தஷ்வந்தை விடுவிக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Daswant | Supreme Court | Death Sentence |