கோப்புப்படம் ANI
தமிழ்நாடு

வங்கக் கடலில் நாளை உருவாகிறது புயல்: வானிலை ஆய்வு மையம்

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (நவம்பர் 27) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு நியூஸ்

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நாளை புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:

"தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நேற்று நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது தொடர்ந்து மேற்கு - வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து நாளை புயலாக வலுப்பெறக்கூடும். அதனைத் தொடர்ந்து, தமிழகக் கடற்கரைப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.

இதன் காரணமாக, தமிழகக் கடலோரப் பகுதிகளில் மழை தொடரக்கூடும். கனமழையைப் பொறுத்தவரையில், அடுத்து வரும் 24 மணி நேரத்துக்கு மயிலாடுதுறை, காரைக்கால், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகனமழையும் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, புதுச்சேரி, விழுப்புரம், கடலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும்.

நவம்பர் 27 அன்று கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகனமழையும் திருவள்ளூர் முதல் புதுக்கோட்டை வரையிலான வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கையைப் பொறுத்தவரை, நவம்பர் 30 வரை குமரிக் கடல், மன்னார் வளைகுடா, தமிழகக் கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகள், மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் தென் மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால், இந்தப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என மீனவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஆழ்கடலில் உள்ள மீனவர்கள், கரைக்குத் திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வடகிழக்கு மழையைப் பொறுத்தவரை, கடந்த அக்டோபர் 1 முதல் இன்று வரையிலான காலகட்டத்தில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பதிவான மழையின் அளவு 328 மி.மீ. இந்தக் காலகட்டத்தின் இயல்பு அளவு 337 மி.மீ. இயல்பை ஒட்டி மழை பெய்துள்ளது.

காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், மேலும் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதைப் புயலாக எதிர்பார்க்கிறோம். தற்போதைய நிலவரப்படி, புயலானது நவம்பர் 29 வரை கடலோரப் பகுதிகளுக்கு இணையாக சுமார் 150 முதல் 200 கி.மீ. தொலைவில் நிலைகொள்ளும். கரையைக் கடப்பது குறித்து அறிய தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்" என்றார் பாலச்சந்திரன்.

இந்தப் புயலுக்கு ஃபெங்கல் எனப் பெயர் சூட்டப்படவுள்ளது. இது சௌதி அரேபியாவால் பரிந்துரை செய்யப்பட்ட பெயர். புயல் காரணத்தால் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (நவம்பர் 27) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.