மலாக்கா ஜலசந்தியில் உருவானது ‘சென்யார்’ புயல் 
தமிழ்நாடு

மலாக்கா ஜலசந்தியில் உருவானது ‘சென்யார்’ புயல்: தமிழ்நாட்டுக்கு பாதிப்பு உண்டா? | Senyar Cyclone |

நவம்பர் 27 அதிகாலை வரை சென்யார் தீவிர புயலாக நிலைகொள்ளும்....

கிழக்கு நியூஸ்

அந்தமான் அருகே மலாக்கா ஜலசந்தியில் சென்யார் புயல் உருவானதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மலாக்கா ஜலசந்தி மற்றும் அதையொட்டிய தெற்கு அந்தமான் கடலில் நவம்பர் 22 அன்று நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, நவம்பர் 23 காலை ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று நேற்று (நவ. 25) காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது தற்போது புயலாக உருப்பெற்றுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு சென்யார் என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்பெயரை ஐக்கிய அரபு அமீரகம் சூட்டியுள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

“மலேஷியா மற்றும் மலாக்கா ஜலசந்தி அருகே நிலவிய உருவாகியுள்ள சென்யார் புயல் மேற்கு, தென்மேற்கு திசையில் நகர்ந்து நாளை (நவ. 27) அதிகாலை வரை தீவிர புயலாக நிலைகொள்ளும். அதன் பிறகு, அடுத்த 24 மணி நேரத்தில் படிப்படியாக பலவீனமடைந்து கிழக்கு நோக்கி திரும்ப வாய்ப்புள்ளது.

குமரிக்கடல் மற்றும் அதனையொட்டிய, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை பகுதிகளில், புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது, இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து, வடக்கு, வடமேற்கு திசையில், தமிழ்நாட்டை நோக்கி நகரக்கூடும். அதன்பின், இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.

தமிழ்நாட்டில் தென் மற்றும் வட மாவட்டங்களில் சில இடங்களிலும், புதுச்சேரியிலும், இன்றும், நாளையும், இடி, மின்னல் மற்றும் பலத்த தரைக்காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டில் சில இடங்களில், டிசம்பர், 1ம் தேதி வரை மிதமான மழை தொடரலாம். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் நவம்பர் 28 அன்று நாகை, திருவாரூர், தஞ்சாவூர் பகுதிகளுக்கு அதிகனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், நவம்பர் 29 மற்றும் 30 ஆகிய இரு நாள்களில் சென்னை உட்பட 11 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The India Meteorological Department has reported that Cyclone Senyar has formed in the Strait of Malacca near the Andamans.